பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமில்லை; சு.க.வின் யோசனைகள் போதுமானவை

பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் நாட்டிலிருந்து துடைத்தெறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள 11 யோசனைகளுக்கும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். விரைவில் இவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமற்றதாகும். நாம் முன்வைத்துள்ள 11 யோசனைகளை நிறைவேற்றினால் இனியொருபோதும் இலங்கையில் பயங்கரவாதமும், அடிப்படைவாதமும் தலைதூக்காது. சிலரின் அரசியல் தேவைகளுக்காக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற அனுமதியளிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

ஶ்ரீ.சு.கவின் யோசனைகள் தொடர்பில் நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அனைவரும் இச்சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற பூரண ஒத்துழைப்பை வழக்குவதாக எம்மிடம் உறுதியளித்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியதாவது,

அரசியலுக்கு அப்பால் நாட்டு மக்களின் நலனையும், தேசிய பாதுகாப்பையும் முதன்மையாக கொண்டு சு.க. இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டை செய்கிறது. தேசிய பாதுகாப்புப்புக்கும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் நிலையான தேசியக் கொள்கையொன்று அவசியம்.எந்தவொரு அரசாங்கம் வந்தாலும் இவற்றைப் பின்பற்றும் வகையில் உரிய சட்டத் திட்டங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் 18 வயதின் பின்னர்தான் ஒருவர் திருமணம் செய்ய முடியும். ஆனால், முஸ்லிம்கள் 12 வயதில் திருணம் முடிக்க முடியுமென உள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும். 12 வயதுக்கு குறைவான அனைவரையும் சிறுவர்களாக கணிக்கும்படி சட்டம் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் ஒரு பொதுச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். மலைநாட்டுக்கு வேறாகவும், முஸ்லிம்களுக்கு வேறாகவும் அல்லது வேறு சமூகங்களுக்கு மற்றுமொரு சட்டமும் இருக்க முடியாது. அனைவரும் இலங்கையர்களாக வாழும் வகையில் பொதுவான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தில் இருந்தால்தான் வேலைகளை செய்ய முடியுமென இல்லை. நாட்டு மக்களின் எதிர்காலத்தை சிந்தித்து நாங்கள் செயற்படுகின்றோம். எதிர்காலத்தில் பல சட்டத் திருந்தங்களை கொண்டுவரவுள்ளோம். 19ஆவது திருத்தத்திலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். உயர்கல்வியும், நெடுஞ்சாலை அமைச்சும் ஒன்றாக இருக்க முடியுமா?. ஆகவே, விஞ்ஞான ரீதியான மறுகட்டமைப்புகளை இதில் செய்ய வேண்டும்.

ஊழல் - இலஞ்சமற்ற அரசை உருவாக்குவது அவசியம். எந்தவொரு அரசு அமைந்தாலும் கொள்கைகள் பொதுவானதாக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இல்லாதவர்கள் அதிகாரத்தை கைப்பற்றவும், அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் எத்தகைய கீழ்த்தரமான செயற்பாடுகளையும் செய்கின்றனர். 70 வருடங்களாக இது தொடர்கிறது. ஆகவே, நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்ல தேவையான கொள்கைகளை வகுத்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை