முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக சித்தரிக்க வேண்டாம்

 ஊடகங்கள், பாதுகாப்பு தரப்பிடம் கோரிக்கை

தீவிரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் அடியோடு ஒழிக்க முஸ்லிம் சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை பாதுகாப்புத்துறைக்கு வழங்கும். முஸ்லிம்களின் துளியளவும் ஆதரவில்லாத ஒரு சிறிய தரப்பே இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளை போன்று சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது

என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் தெரிவித்தனர்.

அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்கள், இதனால் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் எனவும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், பாதுகாப்புத்துறையினரும் இதுகுறித்து உன்னிப்பாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

இந்த ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தாவது,

பயங்கரவாதிகள் நடத்திய மிலேச்சத்தனமான மற்றும் படுமோசமான தாக்கல்களை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்றுவரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகிறது. இத்தாக்குதல்கள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் பாதிப்படைந்துள்ளதுடன், அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது. முஸ்லிம் சமூகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக பல பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இத்தேடுதல் வேட்டைகளின் போது சில ஊடகங்கள் நேரடியாக அழைத்துச் செல்லப்படுகின்றன. ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும். சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலும், அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது.

முஸ்லிம் சமூகத்தில் ஒரு துளியளவும் ஆதரவில்லாத சிறிய குழுவொன்றுதான் இத்தீவிரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளது. 150 அல்லது 200 பேர்தான் இவ்வாறு உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்குழுவை அழிக்க முஸ்லிம் சமூகம் தமது முழு ஒத்துழைப்பை வழங்கும் என்பதுடன், அதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக காட்டும் வகையில் சில பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. பொறுப்புணர்வுடன் மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு, இனம், மதம் என்ற பாகுபாடு கிடையாது. மதத்தை முன்னிலைப்படுத்தி எவரும் தீவிரவாதிகளாகச் செயற்பட முடியாது. சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் அதிகமாக முஸ்லிம் மக்கள் மீதும் முஸ்லிம் பள்ளிகள் மீதும்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முஜீபுர் ரஹ்மான்

இந்த ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்,

பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக நாட்டின் அனைத்துச் சமூகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தீவிரவாதிகளை அடியோடு அழிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ள பாதுகாப்புத்துறைக்கு முஸ்லிம் சமூகம் முழுயாக ஒத்துழைக்கும்.

முஸ்லிம்களுக்குள் ஒழிந்திருந்த அந்த சிறிய பயங்கரவாதக் குழுவால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முழு முஸ்லிம் சமூகத்தை குற்றவாளிகளாகப் பார்க்கின்றனர். ஆகவே, அந்தத் தீவிரவாதக் குழுவை அடியோடு அழிக்க வேண்டும். நமது சமூகங்களை பிளவுப்படுத்துவதே அந்தத் தீவிரவாதக் குழுக்களின் நோக்கமாக இருந்துள்ளது.

 இதிலிருந்து எழுச்சிப்பெற வேண்டும். மூன்று தசாப்பதகாலம் யுத்தம் தொடர்பிலான அனுபவம் எமக்கு உள்ளது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் மீண்டும் ஒருதாய் பிள்ளைகளாக நாம் ஒன்றிணைய வேண்டும்.

அராபி மற்றும் தமிழ் மொழிகள் மூலமான அடிப்படைவாத அல்லது தீவிரவாதக் கருத்துகள் அடிங்கிய புத்தகங்கள் அல்லது ஏதும் பொருட்கள் இருந்தால் அதனை முஸ்லிம் விவகார அமைச்சிடமோ, ஜம்மஇய்யத்துல் உலமாவிடமோ கையளித்துவிடுங்கள். இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

இதேவேளை, ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதியாகவுமுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகிறார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை