ஸ்கொட்லாந்துடனான ஒருநாள் ஆட்டம்: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

இலங்கை - ஸ்கொட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரின், இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் டக்வெத் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரினை 1-0 எனக் கைப்பற்றி கடந்த மூன்று வருடங்களில் தாம் பெற்றுக் கொண்ட முதலாவது இருதரப்பு தொடர் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களில் ஈடுபடும் இலங்கை அணி ஸ்கொட்லாந்து அணியுடன் விளையாடும் இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை (18) மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தொடரின் தீர்மானமிக்க இரண்டாவது போட்டி எடின்பேர்க் நகரில் செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணித்தலைவர் கைல் கோயெட்சர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கினார்.

கடந்த 2015ஆம் ஆண்டிலேயே ஒரு நாள் போட்டிகளில் கடைசியாக ஆடிய திமுத் கருணாரத்ன, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஸ்கொட்லாந்து அணியுடனான இப்போட்டியின் மூலம் ஒரு நாள் சர்வதேச போட்டி ஒன்றில் முதல் தடவையாக இலங்கை அணியினை வழிநடாத்தும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டார்.

இப்போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெற்ற லஹிரு திரிமான்ன, 18 மாதங்களின் பின்னரும் சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸ் 4 வருடங்களுக்கு பின்னரும் ஒரு நாள் போட்டி ஒன்றில் ஆடும் வாய்ப்பினை பெற்றனர்.

மறுமுனையில் அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா, காயம் ஒன்றில் இருந்து பூரணமாக குணமடையாத நிலையில் அவருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கைத்தரப்பு தமது துடுப்பாட்டத்தை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்ணாந்து ஆகியோருடன் ஆரம்பம் செய்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் நிதான ஆரம்பத்தை வழங்கியதனால், இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக சிறப்பான முறையில் 123 ஓட்டங்கள் பகிரப்பட்டது. பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடந்த அவிஷ்க பெர்ணாந்து ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்து 78 பந்துகளில் 74 ஓட்டங்களை குவித்தார். அவிஷ்க பெர்ணாந்து தனது துடுப்பாட்டத்தின் போது 3 சிக்ஸர்களையும், 5 பெளண்டரிகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவிஷ்க பெர்ணாந்துவினை அடுத்து திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தமது அரைச்சதங்களோடு இலங்கை அணிக்கு வலுச்சேர்த்தனர். இதில் திமுத் கருணாரத்ன ஒரு நாள் போட்டிகளில் தான் பெற்ற இரண்டாவது அரைச்சதத்தோடு 77 ஓட்டங்களை குவிக்க, குசல் மெண்டிஸ் ஒரு நாள் போட்டிகளில் தான் பெற்ற 15ஆவது அரைச்சதத்தோடு 56 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களை எடுத்தார்.

பின்னர் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களாக வந்த அஞ்சலோ மெத்திவ்ஸ், திசர பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்த போதிலும் லஹிரு திரிமான்ன தனது துடுப்பாட்டம் மூலம் ஆறுதல் தந்தார்.

லஹிரு திரிமான்னவின் துடுப்பாட்ட உதவியோடும் பின்வரிசை வீரர்களான இசுரு உதான மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரின் அதிரடியோடும் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன 40 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார். இதேவேளை அதிரடி காட்டிய இசுரு உதான 2 சிக்ஸர்கள் அடங்கலாக 15 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 4 பந்துகளுக்கு 12 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக பிரட்லீ வீல் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சபியான் சரீப் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 323 ஓட்டங்களை அடைய ஸ்கொட்லாந்து அணி பதிலுக்கு துடுப்பாட ஆரம்பித்தது.

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டத்தினை அதன் தலைவர் கைல் கொயெட்சர் மற்றும் மெத்திவ் குரோஸ் ஆகியோர் ஆரம்பம் செய்தனர். ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டம் ஆரம்பித்து அவர்கள் நல்ல ஆரம்பத்தை பெற்ற போதிலும், நுவான் பிரதீப் அடுத்தடுத்த விக்கெட்டுக்கள் மூலம் நெருக்கடி தந்தார். அதன்படி, நுவான் பிரதீப்பின் விக்கெட்டுக்களாக கைல் கொயெட்சர் 34 ஓட்டங்களுடனும், கெலும் மெக்லியோட் ஒரு ஓட்டத்துடனும் நடந்தனர். இதனை அடுத்து இன்னுமொரு விக்கெட்டினை பறிகொடுத்து ஸ்கொட்லாந்து அணி மேலும் தடுமாறியது.

எனினும் களத்தில் இருந்த மெத்திவ் குரோஸ், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஜோர்ஜ் மன்ஸி உடன் இணைந்து மீண்டுமொரு இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க முயன்றனர். இந்நிலையில் போட்டியில் மழையின் குறுக்கீடு உருவானது. அப்போது ஸ்கொட்லாந்து அணியினர் 27 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

தொடர்ந்து மழையின் குறுக்கீடு இல்லாமல் போக போட்டியின் வெற்றி இலக்காக ஸ்கொட்லாந்து அணிக்கு டக்வெத் லூவிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 235 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை நெருங்க குறைவான ஓவர்களே இருந்ததனால் தொடர்ந்து அதிரடியான முறையில் ஸ்கொட்லாந்து அணி ஆடத் தொடங்கியது. இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிப்பது ஸ்கொட்லாந்து அணிக்கு சிரமமாகியது.

இறுதியில் 199 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த ஸ்கொட்லாந்து அணி போட்டியில் தோல்வியினை தழுவியது. ஸ்கொட்லாந்து அணியின் வெற்றிக்காக அதிரடி மூலம் போராடிய ஜோர்ஜ் மன்ஸி அரைச்சதம் ஒன்றுடன் 41 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்ததோடு, மெத்திவ் குரோஸும் அரைச்சதம் தாண்டி 55 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இலங்கை அணியின் வெற்றியினை பந்துவீச்சு மூலம் உறுதி செய்து ஒரு நாள் தொடர் வெற்றியினை பெற காரணமான நுவான் பிரதீப் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும், திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தாம் விளையாடிய 8 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியினை தழுவிய இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடனான இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தமது தோல்வி ஓட்டத்தினையும் நிறைவு செய்திருக்கின்றது. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் நுவான் பிரதீப் தெரிவாகியிருந்தார்.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை