சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகாவை நியமிக்குமாறு ஐ.தே.க தொடர்ந்து அழுத்தம்

இவ்வாரமும் ஜனாதிபதியுடன் பேச்சு 

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து இந்த வாரமும் அழுத்தங்களை மேற்கொள்ளும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நேற்று தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் ஐக்கிய தேசிய கட்சி  அரசாங்கத்தை நீக்க முயன்றபோது பொலிஸ் திணைக்களத்தை தனது பொறுப்பின் கீழ்கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் சரத் பொன்சேகாவை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி கேட்டுவரும் நிலையில் அவருக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பதவியொன்றை வழங்க முடியுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அத்துடன் தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களிலும் சரத் பொன்சேகா கலந்துகொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

எவ்வாறெனினும் சரத் பொன்சேகாவை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் விருப்பத்துக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை பற்றி கலந்துரையாட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நான்கு அமைச்சர்கள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டுமென்று கேட்டிருந்தனர்.  

இந்நிலையில் எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக்கொள்ள தான் தாயராக இல்லையென்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

இந்நிலையில் பொலிஸ் திணைக்களமும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பின்படி பாதுகாப்பு அமைச்சு மட்டுமே ஜனாதிபதியின் கீழ் இருக்கலாம் என்று ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தமது கட்சியின் கீழேயே இருக்கவேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. 

இந்நிலையில் முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்குவதை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் விரும்பவில்லை என்று ஜனாதிபதி  ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழுவினரிடம் கூறியுள்ளதாக தெரிய வருகிறது.

Mon, 05/06/2019 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை