இன, மத ரீதியாக பிரிந்து நிற்காது ஒன்றிணைவோம்

இன, மத ரீதியாகப் பிரிந்து நின்று அழிவை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஒவ்வொருவரதும் கலாசாரப் பல்வகைமைக்கு மதிப்பளித்து மனிதர்கள் என்ற வகையில் சமாதானத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது இன்றைய காலத்தின் தேவையாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வெசாக் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அனுப்பிவைத்துள்ள வெசாக் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்பாராத பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக  இலங்கை சமூகம் குழப்பமடைந்து, பீதிக்குட்பட்டு வேதனைப்படும் ஒரு நிச்சயமற்ற சந்தர்ப்பத்திலேயே இம்முறை வெசாக் போயா தினம் எம்மை வந்தடைகிறது.

பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் அதிகளவில் மக்கள் ஒன்றுகூடும் பொருட்கள் மூலமான பூஜைகளை விட்டுத் தவிர்ந்திருக்க வேண்டியேற்படினும், இம்முறை வெசாக் காலத்தில் புத்த மதத்தின் உயரிய பெறுமானங்களின் அடிப்படையில் கொள்கைப் பூஜைகளில் ஈடுபடுவதன் ஊடாக சமூக மறுமலர்ச்சியை எதிர்பார்த்து ஒற்றுமையாக செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும். புத்த பெருமான் போதித்த தர்மமானது தனிநபர் ஆன்மீக விடுதலை, பொது சமூக விடுதலையினை நோக்கமாகக் கொண்ட உன்னதமான தர்ம வழிமுறையாகும்.

புத்த மதத்தின் அடிப்படை அம்சங்களான அன்பு, பரிவிரக்கம், கருணை, மனஅமைதி ஆகிய நான்கு பிரம்மங்களைப் பின்பற்றுவதன் மூலம் எமக்கு மத்தியில் ஆன்மீக அமைதியையும், பொதுவாக சமூகத்தில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதில் சந்தேகமில்லை.

பகைமையைக் கொண்டு பகைமையை முறியடிக்க முடியாது எனப் போதித்த புத்த பெருமான், அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு காட்டுவதன் மூலமே மீட்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெளிவாக உபதேசித்துள்ளார். அதனால் இன, மதரீதியாகப் பிரிந்து நின்று அழிவை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஒவ்வொருவரினதும் கலாசாரப் பல்வகைமைக்கு மதிப்பளித்து மனிதர்கள் என்ற வகையில் சமாதானத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

இந்த நெருக்கடியான சூழ்நிலை தொடர்பாக சிறந்த புரிதலுடன் பொறுமையாகவும், அமைதியாகவும் செயற்பட்டு தேசிய பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மானிடப் பண்புகள் அற்றவனை மானிடப் பண்புகளைக் கொண்டும், பகைமையை அன்பினைக் கொண்டும், சீர்கேட்டினை தர்மத்தைக் கொண்டும், அசத்தியத்தை சத்தியத்தைக் கொண்டும் வெற்றி பெறச் செய்வதற்கு முன்நின்று செயலாற்றும் அர்த்தமுள்ள வெசாக் பண்டிகையாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 05/18/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக