இலங்கையர்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பாடமாகக் கொள்ளுங்கள்

ஒரு நாட்டுக்கு ஒரு சட்டம் என்ற வகையில் இலங்கையர்கள் அனைவருக்கும் ஒரு சட்டமே நடைமுறையில் இருக்க வேண்டும். 04/21 அனுபவத்தை பாடமாகக் கொண்டு சட்டத்தை இனம், மதம், சாதி அடிப்படையில் வேறாக பிரித்து நடைமுறைப்படுத்துவதனை இனிமேலாவது கைவிடுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க நேற்று கேட்டுக் கொண்டார்.  

அத்துடன் பல்லின மக்கள் வாழக்கூடிய எமது நாட்டுக்குப் பொருந்திவராத கருத்துக்கள் குர்ஆனில் இருப்பின் அதனை பிரசாரம் செய்யாமல் நீக்கிக் கொள்ள இஸ்லாமிய மதகுருமார் முன்வர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்தோர் இலங்கைக்குரிய ஒரு சட்டத்தின் கீழ் கட்டுப்பட்டு வாழ முன்வர வேண்டும். இல்லையேல் அவர்கள் தமது சட்டத்துக்கு பொருந்திவரக்கூடிய நாட்டைத் தெரிவு செய்து கொள்ளலாம். அதனை நாம் எதிர்க்கப் போவதில்லையென்றும் அவர் கூறினார்.  

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதில் உரையாற்றும் போதே அவர் மேலும் தெரிவித்ததாவது-,  

எமது நாட்டைப் பொருத்தவரை பிரச்சினையொன்று ஏற்பட்டதும் நாம் அதனை எவ்வாறு பிறர் மீது குற்றம் சுமத்துவது என்பது தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றோமே தவிர அதிலிருந்து எவ்வாறு மீட்சிப் பெறுவது என்பது தொடர்பில் ஆராய மறந்து விடுகின்றோம்.

இந்த நாட்டுக்குள் ஷரியா சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும் மதரசாக்களை ஆரம்பிப்பதற்கும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களே அனுமதி வழங்கியுள்ளனர். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதன் காரணமாகவே நாடு பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது.

மத நம்பிக்கைகள் வெவ்வெறாக இருக்கலாம். ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு நாம் இனிமேலும் இடமளிக்க முடியாது.  

இலங்கையைப் பொறுத்தவரை திருமணம் முடிப்பதற்காக 18 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தாலும் முஸ்லிம்களுக்கு 15 வயதில் திருமணம் முடிக்கலாமென அவர்களின் சட்டம் கூறுகின்றது. இவ்வாறு வெவ்வேறு சட்டங்கள் நாட்டில் இருக்க கூடாது. அனைவருக்கும் ஒரு சட்டமே இருக்க வேண்டும் என்றார்.

(லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்)    

Wed, 05/08/2019 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை