நம்பிக்ைகயில்லா பிரேரணை முஸ்லிம்களுக்கு எதிரானது

எதிர்க்கட்சியினரால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாட்டில் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட ஒன்று என்றும் முஸ்லிம்களை எமது அரசாங்கத்திலிருந்து இல்லாமலாக்குவதற்கான திட்டமாகவே இதனைப் பார்ப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .எனினும் வங்குரோத்து நிலையில் உள்ள இத்தகையோரின் எந்த சதித்திட்டத்தினாலும் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலானது சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதாகும். அரசாங்கமானது சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த உலகநாடுகளின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் வங்குரோத்து அரசியல்வாதிகள் இந்த தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு சிங்கள முஸ்லிம் இனப் பிரச்சினையை ஏற்படுத்தி, அனைத்து முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக காட்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச பயங்கரவாத தாக்குதலானது பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனினும் எமது நாட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சில வாரங்களி லே அதனை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர எமது பாதுகாப்பு படையினருக்கு முடிந்துள்ளது.

அதற்கு எமது நாட்டு முஸ்லிம்கள் 90 வீதமானவர்களின் பூரண ஆதரவு இருந்தமையே காரணமாகும். அதற்கு நாம் நன்றி கூறுகின்றோம்.

எனினும் மஹசோன் பலகாய போன்ற இனவாத அமைப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமற்றதாக்க முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது. மினுவாங்கொடையில் பஸ்கா தொழிற்சாலையை சேதப்படுத்தியதால் அதில் பணிபுரிந்த 95 வீதமான சிங்கள மக்களுக்கு தொழில் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. அந்த தொழிற்சாலை இலங்கை முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமானதல்ல. அதில் முஸ்லிம்கள் 3பேரே தொழில் புரிந்துள்ளனர். அதேபோன்று முஸ்லிம்களுக்கு சொந்தமான அதிகமான தொழிற்சாலைகள், நிறுவனங்களில் சிங்கள மக்களே அதிகமாக தாெழில் புரிந்துவருகின்றனர்.

நாட்டில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் இருந்து வருடாந்தம் நாட்டுக்கு 3பில்லியன் டொலர் வருமானம் அரசாங்கத்துக்கு கிடைத்து வருகின்றது.

இந்த நாடு பெளத்த மக்கள் அதிகம் வாழும் நாடு. அதேபோன்று அனைத்து மத இன மக்களான இலங்கையர்களுக்கும் சொந்தமான நாடாகும். அதனால்தான் ஏனைய மதஸ்தலங்களைவிட பெளத்த விகாரைகளை அமைப்பதற்கும் பௌத்த மதவேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும் அதிக நிதி ஒதுக்கியுள்ளோம்.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக காட்ட எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது. அதன் ஒரு அம்சமாகவே தற்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்திருக்கின்றது.

இந்த நம்பிக்கையிலா பிரேரணையானது ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவில்லை. முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொண்டுவரப் பட்டதாகும். முஸ்லிம் மக்கள் எமது அரசாங்கத்துடன் இருக்கின்றனர். அவர்களை அரசாங்கத்திலிருந்து தூரப்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும்.

இலங்கை மக்கள் எம்முடன் இருக்கும்வரை இவர்களின் எந்த சதி நடவடிக்கையாலும் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை