ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடர் இலங்கைக்கு ஐந்தாவது இடம்

சீன தாய்ப்பேயில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஆசியக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்ற இலங்கை துறைமுக அதிகார சபை கரப்பந்தாட்ட அணி, கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது இடத்துக்கான போட்டியில் வரவேற்பு நாடான சீன தாய்ப்பேயின் டைச்சூன் பேன்ங் கரப்பந்தாட்ட அணியை 3 க்கு 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத்தில் இலங்கை சார்பாக களமிறங்கிய லங்கா லையன்ஸ் அணி, ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும், இம்முறை போட்டித் தொடரில் களமிறங்கிய இலங்கை துறைமுக அதிகார சபை, முன்னணி அணிகளையெல்லாம் வீழ்த்தி ஐந்தாவது இடத்தை தட்டிச் சென்றது.

இதன்படி, ஆசிய கரப்பந்தாட்ட வரலாற்றில் இலங்கை அணியொன்று பெற்றுக்கொண்ட மிகப் பெரிய வெற்றியாக இது பதிவாகியது.

ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள கழகங்களுக்கிடையிலான ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத் தொடர் கடந்த 18ஆம் திகதி சீன தாய்ப்பேயில் ஆரம்பமாகியது.

12 நாடுகளைச் சேர்ந்த முன்னணி கழகங்கள் பங்கேற்ற இம்முறைப் போட்டித் தொடரில் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கரப்பந்தாட்ட சம்பின்ஷிப் தொடரில் சம்பியனாகத் தெரிவாகிய இலங்கை துறைமுக அதிகார சபை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தது.

குழு பி இல் இடம்பெற்றிருந்த இலங்கை துறைமுக அதிகார சபை அணி, முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் துர்க்மெனிஸ்தானின் கோல்கண் கழகத்தை 3க்கு 2 செட் கணக்கிலும், இந்தோனேஷியாவின் போல்ரி ஸமாடார் கழகத்தை 3க்கு 2 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தியது.

இறுதி லீக் ஆட்டத்தில் ஈரானின் பிரபல சர்தாரி வராமின் கழகத்திடம் 3க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவிய இலங்கை துறைமுக அதிகார சபை அணி, பி குழுவில் இரண்டாவது இடத்தைப் பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து காலிறுதிப் போட்டியில் கட்டாரின் அல் - ரய்யான் கழகத்திடமும் 3க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவிய இலங்கை துறைமுக அதிகார சபை அணி, ஐந்தாவது இடத்தினை தீர்மானிக்கின்ற பிளே ஓப் சுற்றில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் பைடர்ஸ் அணியை 3க்கு 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

தொடர்ந்து ஐந்தாவது இடத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி, சீன தாய்ப்பேயின் டைச்சூன் பேன்ங் கரப்பந்தாட்ட அணியை எதிர்த்தாடியது.

போட்டியில் முதல் செட்டை 25-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி இலகுவாக வெற்றி கொண்டது. தொடர்ந்து இரண்டாவது செட்டை 20--25 என்ற புள்ளிகள் அடிப்படையில் சீன தாய்ப்பே அணி கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து, மூன்றாவது செட்டை 26--24 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணியும், நான்காவது செட்டை 25--19 என்ற புள்ளிகள் அடிப்படையில் சீன தாய்ப்பே அணியும் கைப்பற்றியது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நடைபெற்ற தீர்மானமிக்க இறுதி செட்டை 15--19 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிய இலங்கை அணி, 3-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

பீ.எப் மொஹமட்

 

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை