வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் 9 பேருக்கு பிணை வழங்கியமையில் தவறா?

பொலிஸ் தலைமையகம் விஷேட விசாரணை  

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியான இன்ஷாபுக்குச் சொந்தமான வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை ஊழியர்கள் 9பேருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை வெல்லம்பிட்டி பொலிஸாரின் குறைபாடா அல்லது கவனயீனமா என்பன தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் கவயீனமே காரணம் என விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் விஷேட குழு உறுதிப்படுத்தும் பட்சத்தில் அந்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  

பாதுகாப்பு அமைச்சு ஊடகமையத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-  

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியான இன்ஷாப் அஹமடுக்குச் சொந்தமான வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை ஏப்ரல் 22ஆம் திகதி அதிகாலை சுற்றி வளைக்கப்பட்டு பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அதில் கடமையாற்றி 9சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 2ஆம் இலக்க மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மே மாதம் 6ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது நீதிமன்றினால் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  

(ஸாதிக் ஷிஹான்)

Thu, 05/09/2019 - 10:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை