உலகக் கிண்ண பயிற்சி ஆட்டம்: 91 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவு வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவு .

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கடைசி பயிற்சி போட்டி மேற்கிந்தியதீவு – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பிரிஸ்டோலில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெய்ல் 36 ஓட்டங்களும், லிவிஸ் 50 ஓட்டங்களும் பெற்று ஆட்டமிழந்தனர். பொறுப்பாக ஆடிய ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ஓட்டங்ககள் குவித்தார்.

ஜேசன் ஹோல்டர் 47 ஓட்டங்களும், அந்த்ரே ரசல் 25 பந்தில் 54 ஓட்டங்களும் விளாச மேற்கிந்திய தீவு 49.2 ஓவரில் 421 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் பிளெண்டல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். பிளெண்டல் 106 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 85 ஓட்டங்களும் எடுத்தனர்.

மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், நியூசிலாந்து அணி 47.2 ஓவரில் 330 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து, மேற்கிந்திய தீவு அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை