வன்முறையில் ஈடுபட்ட 74 பேர் கைது; 33 பேருக்கு விளக்கமறியல்

Sri Lanka Unrest-Airforce-Group-Captain-Gihan-Seneviratne-Ruwan-Gunasekara-Media Brief-74 Arrested-33 Remanded

மினுவங்கொடை மற்றும் வடமேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட சுமார் 74 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 33 சந்தேக நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மினுவங்கொடை மற்றும் வடமேல் மாகாணத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இன்று (14) மாலை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் விபரம்:
மினுவங்கொடை பிரதேசத்தில் வன்முறையில் ஈடுப்பட்டவர்களில் 9 பேர் நேற்று முன்தினம் இரவும் 5 பேர் நேற்றை தினமும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்களும் மினுவங்கொடை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மே மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று வடமேல் மாகாணத்தில் வன்முறைகளில் ஈடுப்பட்ட சுமார் 60 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் வன்முறையுடன் நேரடியாக தொடர்புபட்ட 10 சந்தேக நபர்கள் குளியாபிட்டிய மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டும் 9 சந்தேக நபர்கள் ஹெட்டிபொல மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டும் உள்ளனர் இவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உச்ச அதிகாரம் பயன்படுத்தப்படும்
வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பொருட்டு வன்முறையில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக உச்ச அதிகாரத்தை பிரயோகிக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் எழுத்து மூலமான உத்தரவை பிறப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெலிகொப்டர் மூலம் துருப்புகள் அனுப்பப்படும்
இதேவேளை, வன்முறைகள் தொடரப்பில் தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில் அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும், ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையை கட்டுப்படுத்தவும் விமானப் படைத் தளபதி தீர்மானித்துள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

சந்தர்ப்பவாதிகளின் குறுகிய நோக்கம்
குருணாகல், வாரியபொல, குளியாப்பிட்டிய, நிகவரெடிய, சிலாபம் மற்றும் மினுவங்கொடை ஆகிய பிரதேசங்களில் மிகவும் கீழ்த்தரமான நோக்கத்தைக் கொண்ட சில சந்தர்ப்பவாதிகள் ஒன்றிணைந்து மிகவும் மோசமான முறையில் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனையடுத்து முப்படையினரும் பொலிஸாரும் உடனடியாக அழைக்கப்பட்டதுடன் நிலைமைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். எனினும் மேற்படி பிரதேசத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பாதுகாப்பை கருதி நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டது.

இனக்கலவரம் அல்ல
மேற்படி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் சொத்துச் சேதங்கள் பல பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் இனங்களுக்கிடையிலோ மதங்களுக்கிடையிலோ இடம்பெற்ற மோதல் சம்பவம் அல்ல என்பதையும் மிகவும் கீழ்தரமான நோக்கத்தைக் கொண்ட சில சந்தர்ப்பவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.

உச்ச கட்ட நடவடிக்கை; பல்வேறு தீர்மானங்கள்
எதிர்காலத்தில் வன்முறையில் ஈடுப்படுவபர்களுக்கு எதிராக முப்படையினரும் பொலிஸாரும் உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அத்துடன் இதற்கு பின்னர் வன்முறை ஏற்படுவதை கட்டுப்படுத்த பல்வேறு தீர்மானங்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக வன்முறையில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக உச்ச அதிகாரத்தை பிரயோகிக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் எழுத்து மூலமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிணை கிடையாது; 10 வருட சிறை
அதே போன்று வன்முறைகளில் ஈடுப்படுபவர்கள் அவசரகால சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்திற்கு அமையவே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவர். இந்த பிரிவுகளுக்கு கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றில் பிணை வழங்கப்படமாட்டது மாறாக மேல் நீதிமன்றத்திலேயே பிணை வழங்கப்படும் அத்துடன் இவர்களது குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

பொலிஸ் நற்சான்றில் வன்முறையாளர்கள் என பதியப்படும்
அத்துடன் இது போன்ற வன்முறையில் ஈடுப்பட்ட நிலையில் கைது செய்யப்படுபவர்கள் எதிர்காலத்தில் வெளிநாட்டு பயணத்திற்காக, தொழிலுக்கா அல்லது வேறு எதாவது காரணங்களுக்காவது பொலிஸ் நற்சான்றுதழ்களை பெற வரும் சந்தர்பங்களில் அவர்களுக்கு நற்சான்று வழங்கப்படமாட்டது. மாறாக அவர்கள் குறித்த வன்முறையில் ஈடுப்பட்ட வன்முறையாளர்கள் என்று குறிப்பிட்டே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

விசாரணைக்குழுக்கள் நியமனம்
குருணாகல் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு எதிர்காலத்தில் இது போன்ற வன்முறைகளை தவிர்க்கும் பொருட்டும் அந்தந்த பொலிஸ் பிரிவிலுள்ள அதிகாரிகளுக்கு மேலதிகமாக விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு சம்பவம் நடைபெற்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எட்டு போர் உள்ளடங்களாக பத்து போர் கொண்ட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பொருட்டு  பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கொழும்பிலிருந்து மற்றுமொரு குழு விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

(ஸாதிக் ஷிஹான்)

Tue, 05/14/2019 - 20:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை