தபால் பரிவர்த்தனை நிலையத்தில் 600 தபால்கள் அனுப்ப முயன்ற விவகாரம்

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல விளக்கம்

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மூன்று சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தபால்கள் இன வன்முறையை ஆதரிப்பவையென முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முற்றாக மறுத்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு தமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தும் உரிமையும் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரையும் விமர்சிக்கும் அதிகாரமும் உள்ளதென சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரியெல்ல

அதனையே ஊடகவியலாளர்கள் முன்னெடுத்திருப்பதாகவும் கூறினார்.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்க தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-

கைது செய்யப்பட்டிருக்கும் ஊடகவியலாளர்கள் எனக்குத் தெரியாமல் 'கொழும்பு டெலிகிராப்' எனும் பிரபலமான செய்தி இணையத்தளத்திலிருந்து கடந்த 28 ஆம் திகதியன்று வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் விகாரைகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் தபால் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து எனக்குத் தகவல் கிடைத்தது.

நான் கடந்த மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னர் பாதுகாப்பு காரணமாக உலக வர்த்தக மையத்தில் இயங்கி வந்த எனது அமைச்சுக்கு வெ ளியிலிருந்தே செயற்பட்டு வருகின்றேன். எனினும் இதுபற்றிய தகவல் கிடைத்ததன் பின்னரே நான் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தேன்.

இத்துண்டு பிரசுரத்தை வாசிக்கும்போது அதில் எவ்விதமான இனவாதத்தை தூண்டும் நோக்கமோ, எவர் மீதும் சேறு பூசும் விடயமோ அல்லது தேசத்துரோகச் செயல் எதுவும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பிலுள்ள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்களா என்பது தொடர்பிலேயே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'கொழும்பு டெலிகிராப்' வலைத்தளத்தில் வெ ளியாகிய இந்த கட்டுரையை இதுவரை எவரும் மறுக்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. நாட்டின் நிலை தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் உரிமை ஊடகவியலாளர்களுக்கு உண்டு.

நான் இச்சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன். இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தியது போலவே அவர்கள் தபால் மூலம் அனுப்பப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் பகிரங்கப்படுத்துங்கள். நாட்டு மக்கள் அதை படித்து அதன் யதார்த்தம் என்ன என்ற தீர்மானத்துக்கு வருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Sat, 05/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை