உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 4 மில். டொலர் பரிசு

உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடலையும், சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகையையும் சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் வெளியிட்டுள்ளது.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இதில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும்ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், ஏனைய அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில், ஐ.சி.சி உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘ஸ்டான்ட் பை’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பொப் பாடகி லோரின் மற்றும் ருடிமென்டல் ஆகியோர் பாடியுள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தூதர் அன்ட்ரூ பிளிண்ட்டொப், லோரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். அத்துடன், உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் காலம், கோடைக்காலம் என்பதால் காட்சியமைப்பும் அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்தில் உள்ள பன்முக கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் இந்த பாடல் உள்ளது. பாடல் வெளியான சிலமணி நேரங்களில், அது இணையதளங்களில் வைரலாகி பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தமுறை உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்காக வழங்கப்படுகின்ற பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் அறிவித்துள்ளது.

உலகக் கிண்ண போட்டியின் மொத்த பரிசுத் தொகை 10 மில்லியன் டொலர்களாகும். இதில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படவுள்ளது. இது இலங்கை ரூபாவில் 70 கோடியாகும். உலகக் கிண்ண வரலாற்றில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகின்ற மிகப் பெரிய பரிசுத் தொகை இதுவாகும். இதேநேரம், 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்கின்ற அணிக்கு 2 மில்லியன் டொலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு 3.75 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது. அதன்படி, இம்முறை பரிசுத் தொகை 250, 000 அமெரிக்கா டொலர்கள் அதிகமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கும் தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

இதேநேரம், லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.70 இலட்சம் (40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்) கிடைக்கும். அதேபோன்று எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெறாமல் வெளியேறும் அணிக்கு ரூ. 175 இலட்சம் (ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை