ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததில் 41 பேர் பலி

ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும்போதும் விமானத்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் விமானம் தீப்பற்றியபோது பயணிகள் பலரும் அவசர வெளிச்செல்லும் வாயில் ஊடாக உயிர் தப்பினர்.

விமானம் மின்னல் தாக்குதலுக்கு இலக்கானதாக உயிர்தப்பியவர்கள் கூறியபோதும், விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காகவே மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியதாக ரஷ்ய தேசிய விமானசேவை குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரு சிறுவர்கள் அடங்குகின்றனர். அந்த விமானத்தில் 73 பயணிகள் மற்றும் ஐந்து விமான ஊழியர்கள் இருந்துள்ளனர்.

விமானம் தீப்பற்றியபடியே இறங்கியதாக ஆரம்பக் கட்ட செய்திகள் கூறியபோதும், விமானம் துள்ளியபடி தரையிறங்கியதாலேயே தீப்பற்றியதாக இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்த நிலையில் எரிபொருளை மொஸ்கோ நகரில் கொட்டுவது ஆபத்துக் கொண்டது என்பதாலேயே அந்த விமானம் எரிபொருளை முழுமையாக நிரப்பியிருந்த நிலையில் தரையிறங்கி உள்ளது.

“33 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் என 37 பேர் உயிர் தப்பியுள்ளனர்” என்று இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்தும் யெலேனா மார்கொஸ்காகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் விமானப்பணிப்பெண் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்தப்பியது அதிசயமான ஒன்று என்று பார்த்தவர் ஒருவர் விபரித்துள்ளார்.

விபத்துக் குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றை அமைக்க ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் உத்தரவிட்டுள்ளார்.

மொஸ்கோ நகரில் இருந்து ரஷ்யாவின் வடக்கு நகரான முர்மன்ஸ்க் நகரை நோக்கி புறப்பட்ட சுகொய் விமானம் 7 நிமிடங்கள் பறந்து 10,000 அடி உயர்ந்த நிலையிலேயே மீண்டும் திரும்பியுள்ளது.

மோசமான காலநிலைக்கு மத்தியில் தவறு ஏதோ இருப்பதாக உணர்ந்ததை அடுத்தே விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 45 நிமிடங்களுக்குப் பின் விமான நிலையத்தை இரு முறை வட்டமிட்ட பின்னரே விமான தரையிறங்கியதாக விமானங்களை கண்காணிக்கும் சேவை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

“நாம் புறப்பட்ட விரைவில் விமானம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானது. தரையிறங்கியது கடுமையாக இருந்தது. நான் பெரும் அச்சத்தை உணர்ந்தேன்” என்று பயணி ஒருவர் ரஷ்ய பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டார்.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை