லீசிங் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் தேவை

தவறினால் 5ஆம் திகதி முதல் வேலை நிறுத்தம் 

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு 

ஏப்ரல் 21குண்டு வெடிப்பையடுத்து தனியார்பஸ் துறையினர்  பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் இதனால் மாதாந்த லீசிங் தவணையைக் கூட செலுத்த முடியாத நிலையில் அரசாங்கம் அதில் தலையிட்டு மூன்றுமாத கால அவகாசத்தைப் பெற்றுத்தர வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.   அவ்வாறான கால அவகாசம் ஒன்றையோ அல்லது நிவாரணம் ஒன்றையோ பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாகவும் இரண்டு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.  

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.  

இதன்போது மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித், அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஸ்டான்லி பெர்னாண்டோ ஆகியோர் விளக்கமளித்தனர்.  

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள்,  

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அந்நாட்களில் தனியார் பஸ் சேவை இடம்பெறவில்லை. சுமார் ஒரு மாத காலம் சேவையை முறையாக முன்னெடுக்க முடியாத நிலை தொடர்ந்தது. இதனால் வருமானத்தில் 85வீத நட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.  

பஸ் உரிமையாளர்கள் தமது லீசிங் கட்டணத்தை செலுத்துவதற்கும் முடியாதுள்ளது.

இதனையடுத்து நாம் அரசிடம் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். லீசிங் செலுத்துவதற்காக மூன்றுமாத கால அவகாசத்தை பெற்றுத்தருமாறு நாம் கோரினோம்.  

எனினும் இதுவரை  அதற்கு எந்தவித பதிலும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இதனால் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒன்றைப் பெற்றுத்தர வேண்டும்.

இல்லாவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டமொன்றுக்கு செல்ல நேரிடும். இலட்சக்கணக்கானோர் தனியார் பஸ் சேவையுடன் தொடர்புபட்ட வர்களாகவுமுள்ளனர்.

இதற்கிணங்க எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் ஜனாதிபதி எமக்குத் தீர்வொன்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குச் செல்ல நேரிடும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  (ஸ) 

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

Thu, 05/30/2019 - 10:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை