வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் 35 பேர் தங்கவைப்பு

இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் 35 பேர், வவுனியாவிற்கு நேற்றிரவு (17) அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிரஜைகள் 19 பேரும்,  ஆப்கானிஸ்தான் பிரஜைகள் 16 பேருமாக மொத்தம் 35 பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாக செயற்படும் கூட்டுறவுக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில்,  நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள்  1,600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பது தொடர்பில் அரசாங்கம் சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளது.

அத்தோடு, வவுனியா மாவட்ட செயலகத்தில் குறிப்பட்ட சில அதிகாரிகளுக்கு எதிர்வரும் சனி, ஞாயிறு உட்பட விடுமுறை தினங்களில் கடமைக்கு சமூகமளிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிகள் தொடர்பில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் கேட்டபோது, அவர்கள் வருகை தந்தமை தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்தார்.  ஊடகங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் குறித்த அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கே.வசந்தரூபன் - வவுனியா விசேட நிருபர்)

Sat, 05/18/2019 - 16:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை