30 வருட யுத்த அனுபவம் பெற்ற படைவீரர்களிடம் ஒப்படைப்பு

யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் பத்தாண்டு நிறைவு வைபவம் நேற்று பத்தரமுல்லையில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள படைவீரர்கள் நினைவு தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்கள் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய போது. (படங்கள்: சுதத் சில்வா, சுலோச்சன கமகே)

சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு

புலனாய்வு பிரிவுக்கும் முக்கிய பொறுப்பு

அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மிக அவசியம்

படைவீரர்கள் நினைவு தின வைபவத்தில் ஜனாதிபதி

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பை நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் வெற்றிகரமாக அதனை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தைப் போலன்றி சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது. அதன் தாக்குதல் எங்கு எப்போது இடம்பெறுமென்பதை கூறமுடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று

தெரிவித்தார். யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் பத்தாண்டு நிறைவு வைபவம் நேற்று பத்தரமுல்லையில் பாராளுமன்ற வளாகத்திலமைந்துள்ள படைவீரர்கள் நினைவு தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் முப்படைத் தளபதிகள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

முப்பது வருட யுத்தம் நிறைவுற்று 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த யுத்தத்தின் போது தாய்நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களுக்காகவும் அங்கவீனமுற்றுள்ள படைவீரர்களுக்கும் மீண்டும் எனது கௌரவத்தை வழங்குகின்றேன்.

யுத்தத்தின் பின்னரும் எமது படைவீரர்கள் இயற்கை அனர்த்தங்களின் போதும் ஏனைய அவசர நடவடிக்கைகளின் போதும் தமது உத்தியோகபூர்வ கடமைக்கு அப்பால் மனிதாபிமான ரீதியில் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புள்ள சேவைக்காக எனது நன்றியையும் கௌரவத்தையும் நாட்டு மக்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

யுத்தம் நிறைவுற்று 10 வருடங்கள் ஆனபோதும் அவர்களது குடும்பத்தினர் 40 வருடங்களாக கண்ணீருடனேயே வாழ்ந்து வருகின்றனர். அக்குடும்பங்களுக்கு எமது அனுதாபத்தை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எல்.ரீ.ரீ.ஈயினருக்கிடையிலான யுத்தம் மிக மோசமானது. 80 களிலிருந்தே நாட்டை ஆண்ட பல அரசாங்கங்களும் யுத்தம் புரிந்துள்ளன. இறுதி இரண்டு வருடங்களில் வெளிநாடுகளில் படைவீரர்களும் எமக்கு ஒத்துழைத்தனர்.

ஒரு இலட்சம் இந்திய இராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்து யுத்தம் புரிந்தபோதும் அதன் மூலம் எல்.ரீ.ரீ.ஈயினரை தோற்கடிக்க முடியவில்லை. எமது படைவீரர்களே தாய்நாட்டை தமது மிகுந்த அர்ப்பணிப்பினாலும் உயிர் தியாகத்தாலும் மீட்டெடுத்தனர்.

2009 மே மாதம் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது. அதன் பின்னர் நாட்டை அமைதியிலும் பொருளாதாரத்திலும் கட்டியெழுப்பி வந்துள்ளோம். அதன் 10 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலேயே கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி சர்வதேச பயங்கரவாத தாக்குதலில் எமது மக்கள் 300 பேர் பலியாகியுள்ளனர்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எமது படைவீரர்களும் பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அவர்களிடம் அதற்கான பொறுப்பை நாம் ஒப்படைத்துள்ளோம். 30 வருட யுத்தத்தை விட இந்த சர்வதேச பயங்கரவாதம் மிகவும் மோசமானது. இது இலங்கை பிரச்சினை மட்டுமன்றி உலகளாவிய பிரச்சினையாகும்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதில் எமது புலனாய்வு பிரிவினருக்கு முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எமது படை வீரர்கள் மற்றும் பொலிஸார் அதற்கான பொறுப்பை ஏற்றுள்ளனர். சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் பலம் அவர்களுக்கு உள்ளது என்பது எமது நம்பிக்கை. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட சகலரையும் கைது செய்துள்ளோம். அதற்கான விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் பிரபல தலைவர்களும் சர்வதேச பயங்கரவாதம் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எங்கு எப்போது எப்படி தாக்குதல் நடத்தப்படும் என கூறமுடியாது என்பதே அவர்களதும் கூற்றாகும். பிரான்ஸ் நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ ஆலயமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று எமது நாட்டில் இடம்பெற்ற தாக்குலுக்கு பின்னரும் பல நாடுகளில் தாக்குதல் இடம்பெற்றுள்ளன. நாம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொண்டு சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முப்பது வருட யுத்தத்தில் அனுபவம்பெற்றுள்ள எமது படைவீரர்களிடம் அதற்கான பொறுப்பை நாம் ஒப்படைத்துள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)

 

 

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை