3 தேவாலயங்களிலும் பலியானவர்களுக்கு ரூ.119.3மில். நஷ்டஈடு

ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் பலியானவர்களுக்கு அரசாங்கம் இதுவரை 119.3மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளது.

நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 86மில்லியன் ரூபாவும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 12.1மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு 21.2மில்லியன் ரூபாவும் நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சங்ரில்லா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத்தாக்குதலினால் பலியானவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் பலியானவர்களுக்காக 2.8மில்லியன் ரூபாவும் சினமன் கிராண்ட் ஹோட்டலில் பலியானவர்களுக்கு 1.4மில்லியன் ரூபாவும் கிங்ஸ்பெரி ஹோட்டலில் பலியானவர்களுக்கு 9இலட்சம் ரூபாவும் தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டலில் பலியானவர்களுக்கு 1.1மில்லியன் ரூபாவும் நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 12.7மில்லியன் ரூபாவும், கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 4.3மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 3.6மில்லியன் ரூபாவும் இதுவரை நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலியான 92பேருக்காக 86மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவாலயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட நட்டஈடுகளை வழங்கும் அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கு ஏற்கனவே அவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக ஒரு இலட்சம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக மீதமான 9இலட்சம் ரூபா தற்போது பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை கட்டுவாபிட்டிய தேவாலயத்துக்கு 92மில்லியன் ரூபா நட்டஈடாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட 130பேருக்கு 12.7மில்லியன் ரூபா நட்டஈடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிரிழந்த 18பேருக்காக 12.1மில்லியனும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 4.3மில்லியன் ரூபாவும் இதுவரை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள ஏனையவர்களுக்கான நட்டஈடுகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் 29பேர் பலியாகியுள்ளதுடன் அவர்களில் 27பேருக்கு 21.2மில்லியன் ரூபா இதுவரை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட 35பேருக்காக 3.6மில்லியன் ரூபா இதுவரை நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் பலியான நான்கு பேருக்காக 2.8மில்லியன் ரூபாவும் சினமன் கிராண்ட் ஹோட்டலில் பலியான மூவருக்கு 1.4மில்லியன் ரூபாவும் கிங்ஸ்பெரி ஹோட்டலில் பலியான ஒருவருக்கு 9இலட்சம் ரூபாவும் தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டலில் பலியான இருவருக்கு 1.1மில்லியன் ரூபாவும் இதுவரை நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி குண்டுத்தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்கள் 43பேர் தொடர்பில் சிலர் இனங்காணப்பட்டுள்ளதுடன் மேலும் சிலரை இனங்காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறு உயிரிழந்தவர்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்துள்ள தேவாலயங்களின் புனரமைப்புக்காக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன் கொச்சிக்கடை மற்றும் கட்டுவாபிட்டிய தேவாலயங்களுக்காக 10 மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்காக 5 மில்லியன் ரூபாவும் கடற்படை மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/18/2019 - 14:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை