தேசிய ஆடவர் கபடி சம்பியன்: அம்பாறை மாவட்ட அணி 2ம் இடம்

தேசிய கபடி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு பண்டாரகம மாவட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ஆடவர் கபடி சம்பியன் போட்டியின் இறுதிப்போட்டியில் அம்பாறை மாவட்ட கபடி அணி இரண்டாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 25 மற்றும் 26ம் திகதிகளில் இந்த போட்டிகள் பண்டாரகம உள்ளக விளையாட்டு மைதானத்தில் சூப்பர் லீக், 'ஏ' டிவிசன், பல்கலைக்கழக மட்டம் மற்றும் பாடசாலை மட்டம் ஆகிய பிரிவுகளாக நடைபெற்றது.

அத்துடன் சூப்பர் லீக் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியானது கடந்த 26ம் திகதி பண்டாரகம உள்ளக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தேசிய கடற்படை அணியை எதிர்த்து விளையாடிய அம்பாறை மாவட்ட கபடி அணி 2 ஆம் இடத்தை பெற்றதுடன், வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டது. மேலும் இந்த வெற்றியானது கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அணியும் பெற்றிடாத வெற்றியாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த சூப்பர் லீக் சுற்றானது இலங்கையின் முப்படைகள் பங்கு பற்றியதுடன், அம்பாறை மாவட்ட கபடி அணி சார்பாக நிந்தவூரில் இருந்து 08 வீரர்களும், அட்டாளைச்சேனையிலிருந்து 04 வீரர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கு கழகத்தைச் சேர்ந்த தேசிய வீரர் அஸ்லம் சஜா இறுதிப்போட்டியில் தனது சொந்த கழகத்தை எதிர்த்து தேசிய கடற்படை அணிக்கு விளையாடியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை