அரச ஊழியர்களுக்கு ஜூலை முதல் ரூபா 2,500 கொடுப்பனவு

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஜூலை முதலாம் திகதி முதல் மாதாந்தம் 2,500 ரூபா வழங்கப்படுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார்.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபா கொடுப்பனவை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்ததையடுத்து இதற்கான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டது.

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிவிப்பின் பிரகாரம் சகல அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் ரூபா 2,500 இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுச் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இதற்கான 09/2019 இலக்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசினால் வெளியிடப்பட்ட 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப சகல அரச ஊழியர்களுக்கும் ஜூலை.01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் ஓய்வூதியக் கணிப்பீட்டின் கீழ் கவனத்தில்

கொள்ளப்படாத 2,500 ரூபாவை மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவைச் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இச் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2013.12.31ஆம் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 37/2013 ற்கு ஏற்ப மாதாந்தம் செலுத்தப்படும் ரூபா 7,800 வாழ்க்கைச் செலவுப் படியைத் தொடர்ந்தும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும் எனவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கு இச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

லக்ஷ்மி பரசுராமன், அட்டாளைச்சேனை ரிசான்

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை