அரச சேவையில் 22ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம்

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

அரச சேவையில் மேலும் 22ஆயிரம் பேரை இணைத்துக்கொள்வதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

இவர்களுக்கான நியமனங்கள் வெகு விரைவில் வழங்கப்படுதோடு, இவர்கள் அபிவிருத்தி செயற்திட்ட அதிகாரிகளாக நியமிக்கப்படுவர் என்றும் பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.  

பிரதமர் செயலகத்தில் அபிவிருத்தி செயற்பாட்டு பிரிவு ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்று நேற்றுமுன்தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதுடன் இங்கு விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் விளக்கமளித்த அமைச்சர்,  

நாம் அனைவரும் எமது நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து அதனை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம்முன்னுரிமையளித்து செயற்பட்டு வருகிறது.நாட்டில் பட்டதாரிகள் உட்பட பெருமளவிலானோர் தொழில்வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.அவர்களுக்கு அபிவிருத்தி செயற்றிட்ட அதிகாரிகள் நியமனம் வழங்கப்படவுள்ளது.  

அதேவேளை சமுர்த்தித் திட்டங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் புதிதாக 6இலட்சம் பேரை சமுர்த்தி உதவிபெறும் பயனாளிகளாக இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சமுர்த்தித் துறையில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளன. சமுர்த்தி உதவி பெறுவதற்கு தகுதியானவர்களுமன்றி ஏனையோருக்கு தனனிச்சையாக சமுர்த்தி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை நிவர்த்திசெய்யும் வகையிலேயே புதிதாக 6இலட்சம் பேருக்கு சமுர்த்தி உதவி வழங்கப்படவுள்ளது. அரசாங்கம் சகல துறைகளிலும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி என அனைத்துத் துறைகளிலும் பாரிய அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அரசாங்கம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கும்.

நாடு பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)  

Thu, 05/30/2019 - 12:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை