சுற்றுலாத் துறைக்கு வழங்கிய கடன்,வட்டிகள் அறவீடு; 2020 ஜுலை வரை ஒத்திவைக்க முடிவு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிகளை அறவிடுவதை 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று(07)நடைபெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உபகுழு சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசனையை தயாரித்திருந்தது. இந்த யோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதற்கமைய சுற்றுலாத்துறையில் உள்ளவர்கள் குறிப்பாக ஹோட்டல்கள் பெற்றுக்கொண்ட கடன்கள், கடன்களுக்கான வட்டிகள் மற்றும் கடன் தவணைகளை அடுத்த வருடம் ஜுன் மாதம் ஒத்திவைப்பதற்கும் அதுவரை அவர்களுக்கு சலுகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அது மாத்திரமன்றி இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசேடமான காப்புறுதித்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். ஹோட்டல்களில் சோதனைகளை மேற்கொள்வதற்கான ஸ்கானிங் இயந்திரங்களை இறக்குமதிசெய்வதற்கு சலுகைவழங்கவுள்ளோம். பாதிப்படைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்கப்படும் என்றார்.

Wed, 05/08/2019 - 13:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை