சுற்றுலாத் துறைக்கு வழங்கிய கடன்,வட்டிகள் அறவீடு; 2020 ஜுலை வரை ஒத்திவைக்க முடிவு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிகளை அறவிடுவதை 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உபகுழு சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசனையை தயாரித்திருந்தது. இந்த யோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதற்கமைய சுற்றுலாத்துறையில் உள்ளவர்கள் குறிப்பாக ஹோட்டல்கள் பெற்றுக்கொண்ட கடன்கள், கடன்களுக்கான வட்டிகள் மற்றும் கடன் தவணைகளை அடுத்த வருடம் ஜுன் மாதம் ஒத்திவைப்பதற்கும் அதுவரை அவர்களுக்கு சலுகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அது மாத்திரமன்றி இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசேடமான காப்புறுதித்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். ஹோட்டல்களில் சோதனைகளை மேற்கொள்வதற்கான ஸ்கானிங் இயந்திரங்களை இறக்குமதிசெய்வதற்கு சலுகைவழங்கவுள்ளோம். பாதிப்படைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்கப்படும் என்றார்.

அமைச்சர் திலக் மாரப்பண

ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற குழப்பநிலையை மிகவும் சூட்சுமமான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமைக்காக நாம் பிரதமருக்கு நன்றி கூற வேண்டும்.

பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் கடமைகளை முறையாக செய்துள்ளார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினரைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதே சட்டத்தையே நாம் இப்பயங்கரவாதக் கும்பலுக்கும் பயன்படுத்துகின்றோம்.

இந்த அடிப்படைவாத கும்பலுக்கு மட்டும் எந்தவொரு அதிகாரமும் கூட, குறைய என்பதற்கில்லை. நாம் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இவ்வாறான கும்பலை அழிக்க முடியும்.

புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் கடுமையானதாக இருக்கும் என சிலர் கூறுகின்றனர். எந்தவிதமான கடுமையும் இதில் இல்லை. இந்த சட்டத்துக்கு அமைய நீதிமன்றம் செயற்பாடுகளைக் கண்காணிக்கும். இதுவே இதில் காணப்படும் வித்தியாசமாகும்.

அத்துரலிய ரத்தன தேரர் (ஐ.தே.க)

இலங்கையில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு இந்தியா பெரும் உதவி செய்தது. எல்.ரீ.ரீ.ஈ யினருக்கும் இந்தியா பயிற்சி அளித்திருந்தது. அதேபோன்று தான் இன்று ஐ.எஸ் அமைப்பும் உள்ளது.

இன்று மதங்களுக்கிடையே அடிப்படைவாதத்தை உருவாக்கியது சஹ்ரான் இல்லை. அவருக்கு முன்னரே பலர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் நாம் பொறுமையுடன் இருந்தோம்.

தற்போது மனிதத்துவம் இல்லாத மதமாக இஸ்லாம் மாறியுள்ளது.சஹ்ரான் 15 வயதில் திருமணம் முடித்துள்ளார். அவருக்கு அழகான குழந்தைகள் உள்ளனர். எதற்காக தனது குடும்பத்தைக்கூட நினைத்துப்பார்க்காமல் இப்படியொரு மிலெச்சத்தனமான செயலில் அவர் களமிறங்க வேண்டும்.

வியாழேந்திரன் (த.தே.கூ)

மட்டக்களப்பில் சஹ்ரானின் பல முகாம்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில் தேடுதல்கள் நடத்தப்பட வேண்டும். எல்லைப்புறங்களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் தமது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்கின்றார்கள்.

பெட்டிகெம்பஸ் பிரைவட் லிமிட்டடிற்கு 3.6 பில்லியன்ரூபா பணம் சவூதி அரேபியாவிலிருந்து வந்துள்ளது. ஏழு தடவைகள் பெருந்தொகையான பணம் இந்த நிறுவனத்துக்கு வந்துள்ளது. சுமார் 4300 கோடி ரூபாய் பணம் இலங்கை வங்கியூடாக வந்துள்ளது. அந்நிறுவனத்தின் 90 சதவீதமான பங்குகளை ஆளுனர் ஹிஸ்புல்லாவும் அவரது மகனும் கொண்டுள்ளனர். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

மட்டக்களப்பின் கிராமப்புறங்களிலுள்ள மேலும் பல இடங்களில் தேடுதல்கள் நடத்தப்பட வேண்டும். அறிந்த இடங்கள் மட்டுமன்றி அறியாத பல இடங்களிலும் பயங்கரவாத கும்பல் தமது ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கக்கூடும்.

பைசர் முஸ்தபா

(ஐ.ம.சு.மு)

எமது சமூகத்தின் குறிப்பிட்டதொரு பிரிவினர் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றம் பெருவார்களென்பது நாம் எந்தவொரு காலத்திலும் நினைத்துக்கூட பார்த்திராத விடயம். அவர்களை நாம் ஒரு காலமும் இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்ளப்பொவதில்லை. அதனால்தான் அவர்களது சடலங்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செயய்வில்லை.

முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. இச்சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு எம்மால் ஆறுதல் கூற முடியாது. அவர்களின் வலிகளும் வேதனைகளும் அவர்களுக்கு மட்டுமே உரியது. குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு எம்மால் ஆறுதல் கூற இயலாது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். இடிபாடுகளுக்கு உள்ளான தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் புனரமைப்பு செய்ய வேண்டும். மீண்டும் பயங்கரவாத அமைப்பு தலைத்தூக்குவதற்கு இடமளிக்காத வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

பிரதியமைச்சர் மனுஷ

நாணயக்கார

நாட்டில் நடந்த கோர சம்பவத்துக்கு நாம் 225 பேரும் பொறுப்புக்கூற வேண்டும். நாம் இதனை தடுத்து நிறுத்தாமல் ஒருவருக் கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது இதற்கு திர்வாக மாட்டாது.

பயங்கரவாதிகள் உருவாகுவதற்கு ஏற்ற சுழலை நாம் முதலில் இல்லாமல் ஒழிக்க வேண்டும். அதற்காக இலங்கையர்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் எந்தவொரு அடிப்படைவாதிகளாலும் இதற்குள் தலைத்தூக்க முடியாது.

சுமார் 30 வருடங்களாக நாம் பாரிய மோதல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். நாட்டுக்குள் குண்டு வெடிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக அரசியல்வாதிகளாகிய நாமே மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். ஒரு சட்டத்தை உருவாக்கி அனைவரும் இலங்கையர்களாக வாழ்வோம்.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை