2017 இல் ஸஹ்ரானை கைது செய்ய பயங்கரவாத தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்தது

பெப் 19 இல் பாதுகாப்பு சபை கூடியபோது ஐ.எஸ் குறித்து ஆராயப்படவில்லை

தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸ்

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் இறுதியாக பெப்ரவரி 19 ஆம் திகதி தான் பாதுகாப்பு சபை கூடியது. 2015 முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றி ஆராயப்பட்டது என தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸ் தெரிவித்தார்.  

அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்பு செயலாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்திருந்தேன். எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.  

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராயும் விசேட பாராளுமன்ற குழுவின் அமர்வு நேற்று பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. அதன் பதில் தலைவர் ஜெயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் நடந்த இந்த அமர்வில் சாட்சியமளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,  

கேள்வி: ஸஹ்ரான் குழு ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்தி குழு தொடர்பில் புலனாய்வு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டதா?  

பதில்: புலனாய்வு குழு கூட்டம் வாராந்தம் இடம்பெறும். சகல சந்தர்ப்பங்களிலும் இதுபற்றி ஆராயப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு முதல் ஆராயப்பட்டது. முதலில் 2015 ஒக்டோபரில் தான் இது பற்றி ஆராயப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. பாதுகாப்பு சபையில் ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து புலானாய்வு சேவை பணிப்பாளர் தெளிவுபடுத்தியிருந்தார்.  

2017 மார்ச்சில் காத்தான்குடியில் இரு முஸ்லிம் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதன்போதே ஸஹ்ரான் குறித்து பேசப்பட்டது. இனவாத கருத்து பேசிய அவரை கைது செய்ய பயங்கரவாத தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்தது.  

கேள்வி: ஸஹ்ரான் குறித்து முன்பிருந்தே அறிவித்ததாக முஸ்லிம் தரப்பினர் கூறியுள்ளனர்.  

பதில்: எனக்கு அவ்வாறு தகவல் வழங்கப்படவில்லை. பாதுகாப்பு செயலாளருக்கு தகவல் கிடைத்திருந்தால் எனக்கு அறிவித்திருப்பார்.  

கேள்வி: ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வு குழு எப்பொழுது கூடியது ?  

பதில்: ஏப்ரல் 9 ஆம் திகதி கூடியது.  

கேள்வி: இந்திய புலனாய்வு தகவல் ஏப்ரல் 4 ஆம் திகதி கிடைத்ததா?  

பதில்: அரச புலனாய்வு பணிப்பாளருக்கு கிடைத்தது. அவர் ஏப்ரல் 7 ஆம் திகதி எனக்கு கடிதம் மூலம் அறிவித்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை. 8 ஆம் திகதி அதனை திறந்து பார்த்தேன். பாதுகாப்பு செயலாளரிடம் அதுபற்றிக் கூறினேன். பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்புவதாக அவரிடம் கூறிய போது அனுப்புமாறு தெரிவித்தார்.  

9 ஆம் திகதி நடந்த புலனாய்வு குழு கூட்டத்தில் இது பற்றி ஆராயப்படவில்லை. கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில் இது பற்றி பேசினேன்.  

கேள்வி: இங்கு குறித்த புலனாய்வு தகவல் பிரதான தலைப்பாக ஆராயப்படவில்லையா?  

பதில்: கிடைத்த இரு கடிதங்களையும் முன்வைத்து பேசினேன். ஆனால் இது பற்றி ஆராயப்படவில்லை. இந்த தகவல் தொடர்பில் பொலிஸார் செயற்பட்டிருக்கலாம். இந்த நிலையில் பொலிஸ் மாஅதிபருக்கு 9 ஆம் திகதி  எழுதிய இரகசிய கடிதமொன்றை அனுப்பினேன்.  

கேள்வி: ஏப்ரல் 21 சம்பவம் வரை அவர் இது பற்றி உங்களுடன் பேசவில்லை.  

பதில்: இல்லை.  

கேள்வி: ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் இறுதியாக பாதுகாப்பு சபை எப்பொழுது கூடியது?  

பதில்: பெப்ரவரி 19 ஆம் திகதி கூடியது. அதுவரை இந்த தகவல்கள் ஆராயப்படவில்லை. அதற்கு முன்னர் ஜனவரி 14 இல் கூடியது.  

கேள்வி: ஐ.எஸ். குறித்து பாதுகாப்பு சபையில் பேசப்பட்டதா?  

பதில்: ஆம். ஆனால் சகல சமயங்களிலும் ஆராயப்படவில்லை.ஸஹ்ரான் குறித்து பணிப்பாளர்  அவரது வெறுப்புப் பேச்சு பற்றியும் பேசினார். வெறுப்பு பேச்சு தொடர்பில் பொலிஸார் செயற்படலாம்.  

கேள்வி: இனவாத, மதவாத பிரச்சினைகளில் எங்கு தவறு நடந்துள்ளது?  

பதில்: ஆரம்ப காலத்தில் சாதாரண சட்டத்தின் கீழ் பொலிஸார் நடவடிக்கை எடுத்தார்கள். இதன் போது குற்றவாளிகள் தப்பும் சந்தர்ப்பம் இருந்தது. அவசரகால சட்டத்தின் கீழ் நீண்டகாலம் தடுத்து வைத்து விசாரிக்க முடிந்தது. அடிப்படைவாத கருத்துக்களை வெளியிடுவோர் தொடர்பில் பொலிஸாருக்கு தெளிவு போதாது. அவர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் செயற்பட்டு பழகியிருந்தனர். இனவாத கருத்துக்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கேள்வி: ஐ.எஸ் குறித்து எப்பொழுது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது?  

பதில்: 2017 இல் இலங்கையர் சிலர் சிரியா சென்றிருந்தார்கள். இவர்களுக்கு எதிராக செயற்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இவர்கள் தொடர்பில் செயற்பட உரிய பொறிமுறையொன்றை தயாரிக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தேன். இது தொடர்பில் அவர் எத்தகைய நடவடிக்கை எடுத்தார் என்று தெரியாது. 2018 பெப்ரவரியில் மீள கடிதம் அனுப்பினேன். அதற்கும் பதில் கிடைக்கவில்லை.  

கேள்வி: ஐ.எஸ் எமது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என்பது குறித்து புலனாய்வு குழு கூட்டத்திலோ பாதுகாப்பு சபையிலோ ஏன் கவனம் செலுத்தப்படவில்லை?  

பதில்: காரணம் கூற முடியாது. இதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டிருக்கலாம்.  

கேள்வி: அச்சுறுத்தல் குறித்து அறிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இது தொடர்பில் அழுத்தம் வழங்கியிருக்க முடியாதா?  

பதில்: எனக்கு அந்த அதிகாரம் கிடையாது . ஆனால் இதனை செயற்படுத்தியிருக்கலாம்.  

கேள்வி: 2015 இல் இருந்து இது பற்றி பேசியதாக கூறினீர்கள். பாதுகாப்பு சபைத் தலைவர் எந்த உத்தரவும் வழங்கவில்லையா?  

பதில்: பொலிஸ் திணைக்களமே இது தொடர்பில் செயற்பட வேண்டும். புலனாய்வு சேவை பணிப்பாளருடன் பேசி நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம். தகவல் பெற்றவர் அதன் பாரதூரத்தை உணர்ந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தாக்குதல் நடைபெற இருப்பதாக எந்த கடிதமும் கிடைக்கவில்லையா.  

கேள்வி: ஏப்ரல் மாதம் தகவல் வந்ததா.  

பதில்: புலனாய்வு சேவைக்கு எங்கிருந்து தகவல் வந்ததென்று தெரியாது. இந்தியாவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  

கேள்வி: தாக்குதலுக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு கூட தூதரக அறிவிப்பு வந்ததா.  

பதில்: தெரியாது.  

கேள்வி: இத்தனை தகவல்கள் பரிமாறப்பட்டும் இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் எதனையும் அறிந்திருக்கவில்லை என்று கருத முடியுமா?  

பதில்: தெரியாது.  

(ஷம்ஸ் பாஹிம்)  

Thu, 05/30/2019 - 13:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை