2014 ஐ.எஸ்.அமைப்பை தடை செய்திருந்தால் பாரதூரம் ஏற்பட்டிருக்காது

அச்சுறுத்தல் நிலைமை 99 வீதம் கட்டுப்பாட்டில்

பாராளுமன்ற  தெரிவுக்குழுமுன் பாதுகாப்பு செயலர்

நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் நிலைமை 99 வீதம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அடுத்து மத்தியகால, நீண்டகால திட்டங்களை முன்னெடுத்து பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்ற குழுவின் முன்பாக சாட்சியமளித்த அவர், 2014ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ்.தொடர்பில் தகவல் கிடைத்திருந்தது. அந்த அமைப்பை இங்கு தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அதனை தடைசெய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

விசேட தெரிவுக் குழுவின் அமர்வு அதன் பதில் தலைவர் ஜெயம்பதி விக்கிரமரத்னவின் தலைமையில் நேற்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது.வரலாற்றில் முதற் தடவையாக பாராளுமன்ற தெரிவிக்குழு அமர்வில் பங்கேற்க ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இதன் போது குழு உறுப்பினர்களின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறியதாவது,

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துதல்,வெளிநாடுகளுடனான புலனாய்வு தகவல்களை மேம்படுத்துதல்,தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்துதல், கைதானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் உட்பட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புலிகளுடனான யுத்தம் போன்றதல்ல இது. 2,3 மாதத்தில் இதற்கு முடிவு கட்ட முடியாது.வேறு அமைச்சுகளுடன் இணைந்து பல திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது போன்று இதனுடன் தொடர்புள்ளவர்களுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைகையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படும் வகையிலான திட்டம் முன்னெடுக்கப்படும்.

எமது புலனாய்வு பிரிவில் குறைபாடுகள் இருக்கும்.அவற்றை மேலும் மறுசீரமைக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் எப்பொழுது வந்தார்கள்,எப்பொழுது திரும்பிச் சென்றார்கள் என்ற தகவல்கள் பெறக்கூடிய நிலை வேண்டும். அவசர தகவல்கள் தொடர்பில் சிறப்பாக செயற்பட்டு வருகிறோம்.

கேள்வி.புலனாய்வு பிரிவு செயலிழந்துள்ளதா?

பதில்; இல்லை.ஒருவர் இல்லையென்பதற்காக அவ்வாறு செயலிழக்காது.

கேள்வி; முன்னாள் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இருந்த நாளக்க சில்வா, ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பாகவும் சஹ்ரான் குழு குறித்தும் விசாரணை நடத்தியிருந்தார். அவரை கைது செய்ததால் விசாரணை தடைப்பட்டதா?

பதில்; அவர் எந்தளவு தூரம் செயற்பட்டார் என்று தெரியாது. இவ்வாறான நிலையில் முழு புலனாய்வு பிரிவும் செயலிழக்காது.

கேள்வி; இவ்வாறான தாக்குதல் நடந்தால் பாதுகாப்பு சபை உடனடியாக கூட்டப்பட வேண்டுமா?

பதில்; சம்பவம் நடந்தவுடன் கூட்டியிருக்க வேண்டும்.

கேள்வி; கூட்டப்படாவிடின் யார் பொறுப்பு?

பதில்; பாதுகாப்பு செயலாளர் தான் பொறுப்பு. பாதுகாப்பு அமைச்சர் தரப்பிலும் செயற்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி; இந்தத் தாக்குதலின் பின்னர் ஏப்ரல் 22 இல் தான் பாதுகாப்பு சபை கூடியது. தாமதமாக பாதுகாப்பு சபை கூட்டப்பட்டதினால் பாதிப்புகள் ஏற்பட்டதா?

பதில்; பாதுகாப்புச் சபை உடன் கூட்டப்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி; ஜனாதிபதி நாட்டில் இல்லாத போது பிரதமர் தலைமையில் பாதுகாப்பு சபையை கூட்ட முடியுமா?

பதில்; ஆம்.

கேள்வி; பிரதமர் பாதுகாப்பு சபையை கூட்டி அதற்கு உறுப்பினர்கள் செல்லாவிட்டால் அது தவறா?

பதில்; பாதுகாப்பு அமைச்சருக்கு இதுபற்றி அறிவித்து அவர் அனுமதித்தால் செல்ல வேண்டும்.

கேள்வி; நாட்டிற்குள் வரும் பணம் குறித்து ஆராயப்படுகிறதா?

பதில்; சில வழிகளில் வரும் பணம் குறித்து மத்திய வங்கிக்குக் கூட தெரியாது.

கேள்வி; தூண்டி விடும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா?

பதில்; இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்துகிறார்.

சிலர் பிரச்சினையை விஸ்தரிக்க முயல்கின்றனர். குருணாகலில் பிரபலமான சிலர் கூடியிருந்தனர்.பிக்கு ஒருவரும் இருந்தார். அழும் குழுந்தையின் முகத்தில் குத்துவது போன்று இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை அன்றி இனவாத செயற்பாடுகளை தடுக்கவே 24 மணி நேரமும் செயற்பட வேண்டியுள்ளது.

கேள்வி; கைது செய்யப்படுவோரை விடுவிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா?

பதில் ; யார் அழுத்தம் கொடுத்தாலும் விடுவிக்க மாட்டோம்.

கேள்வி; அப்துல் ராசிக் கைது செய்யப்படாதது ஏன்.?

பதில்; அவரை கைது செய்ய போதிய ஆதாரங்கள் கிடையாது. அவரை ஏன் கைது செய்யவில்லை என கேட்கின்றனர்.உரிய ஆதாரங்களுடனேயே எவரையும் கைது செய்ய வேண்டும்.

கேள்வி; ஏப்ரல் 21 தாக்குதல் ஏன் நடந்தது.?

பதில்; குறைபாடுகள் இருந்தது.இல்லாவிட்டால் தாக்குதல் நடந்திருக்காது.கிடைத்த தகவல்களின் படி 99 வீத பணி நிறைவடைந்துள்ளது.தொடர்புள்ளோர்.தகவல் தெரியாதோர் இருக்கலாம்.

13 ஆம் திகதி தாக்குதல் நடைபெற இருந்ததாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. புலனாய்வு தகவல் படி பயங்கரவாதிகளிடம் ஆயுதங்கள் கிடையாது.வெடிபொருட்களே பெருமளவு இருந்தன. அவை வரும் வழிகளையும் அடைத்துள்ளோம். இவர்களிடம் பாரிய பயிற்சி முகாம்கள் கிடையாது.

கேள்வி; பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்க தற்பொழுதுள்ள சட்டம் போதுமானதா?

பதில்; புதிய சட்டங்கள் தேவை.பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு யோசனை வழங்கியுள்ளோம் என்றார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை