19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட்; இலங்கை அணி 26 ஓட்டங்களினால் வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நவோத் பரணவிதான, கமில் மிஷாரவின் அபார துடுப்பாட்டம் மற்றும் சுதீர திலகரத்னவின் அசத்தல் பந்துவீச்சினால் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 26 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (26) நடைபெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவர் நிபுன் தனன்ஞய முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தொடக்க வீரர்களாக வந்த கமில் மிஷார மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர். இதில் நவோத் பரணவிதான 54 ஓட்டங்களுடனும், கமில் மிஷார 65 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அணித் தலைவர் நிபுன் தனஞ்சய 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். இவரது ஆட்டமிழப்புக்கு பின்னர் மொஹமட் சமாஸுடன் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சொனால் தினூஷ நிதானமாக ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டு இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

எனினும், 17 ஓட்டங்களைப் பெற்ற சொனால் துரதிஷ்டவசமாக ரன்–அவுட் முறையில் ஆட்டமிழக்க, நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த மொஹமட் சமாஸ் மொஹமட் தாஹாவின் பந்துவீச்சில் (42) வெளியேறினார். இவ்விரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டதையடுத்து, பின்வரிசை வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் அடுத்தடுதத்து ஆட்டமிழந்தனர். இதில் 3 விக்கெட்டுகள் ரன்–அவுட் முறையில் வீழ்த்தப்பட்டன.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை எடுத்தது.

பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பாக மொஹமட் ஜுனைட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 235 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சைம் அய்யூப் மற்றும் ஹைதர் அலி ஆகியோர் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுகாக 85 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சைம் அய்யூப் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இலங்கை வீரர்களுக்கு மிகவும் தேவையான முதல் விக்கெட்டை அசேன் டேனியல் கைப்பற்றினார்.

தொடர்ந்து அதே ஓவரில் அய்யூப்பின் ஜோடியாக இருந்து அரைச் சதம் கடந்த ஹைதர் அலியின் விக்கெட் டில்ஷான் மதுஷங்கவின் அபார களத்தடுப்பினால் ரன் அவுட் ஒன்றின் காரணமாக 51 ஓட்டங்களுடன் வீழ்த்தப்பட்டது. இதன் பின்னர், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரொஹைல் நாசிர் மற்றும் மொஹமட் தாஹா ஆகியோர் மிகவும் நிதானமாக ஆடினர்.

இவ்விருவரும் 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, டில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சில் மொஹமட் தாஹா 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனைத்தொடர்ந்து மொஹமட் சமாஸின் அபார களத்தடுப்பினால் ரொஹைல் நாசிர் 47 ஓட்டங்களுடன் ரன்–அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த பின்வரிசை வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி 47.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை தரப்பில் சுதீர திலகரத்ன 3 விக்கெட்டுகளையும், நவோத் பரணவிதான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

26 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1--0 என முன்னிலை பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று (28) இதே மைதானத்தில் இடம்பெறும்.

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை