பயங்கரவாதிகளின் ரூ 14 கோடி பணம்; ரூ 700 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

அனைத்தையும் முடக்க துரித நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பயங்கரவாத குழுவினருக்குச் சொந்தமானபெருந்தொகையான பணம் மற்றும் சொத்துக்கள் காணப்படுவதை குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கமைய, 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பணத்தையும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு கண்டுப்பிடித்துள்ள பணத்தின் ஒரு தொகையை மீட்டெடுத்துள்ள அதே சமயம், மிகுதி ஒரு தொகை பணம் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள கணக்குகளை முடக்குவதற்கும் கைப்பற்றப்பட்டுள்ள சொத்துக்களை முடக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் சந்திப்பானது பாதுகாப்பு அமைச்சு ஊடகமையத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இதன் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :- 

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதினம் தொடக்கம் பயங்கரவாதிகள் தொடர்பில் சி. ஐ. டியினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். இவற்றில் பயங்கரவாதிகளின் பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் உள்ளடங்கும். அந்த அடிப்படையிலேயே இவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார்.  இதேவேளை, குண்டுத் தாக்குதல் நடைபெற்ற தினம் தொடக்கம் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 73 பேர் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் (சி.ஐ.டி) மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் (ரி. ஐ. டி) தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  

இவர்களில் ஏழு பெண்கள் உட்பட 54 பேர் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழும் இரண்டு பெண்கள் உட்பட 19 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு பொலிஸ் பிரிவினர்களும் தொடர்ந்தும் மேற்படி சந்தேக நபர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஸாதிக் ஷிஹான்)  

Tue, 05/07/2019 - 11:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை