மொழியாசிரியர்கள் 1,200 பேருக்கு பயிற்சியளிக்க விண்ணப்பம் கோரல்

மொழியாசிரியர்கள் 1,200 பேர் எனது அமைச்சினால் உள்வாங்கப்பட்டு அதில் 800 தமிழாசிரியர்களும் 300 சிங்கள மொழி ஆசிரியர்களும் 100 ஆங்கில மொழி ஆசிரியர்களும் என மொத்தமாக 1,200 பேர் பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள் எனத் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழாசிரியர்கள் சிங்கள கல்விக் கூடங்களில் தமிழ் மொழியையும், சிங்கள ஆசிரியர்கள் தமிழ்க் கல்விக் கூடங்களில் சிங்கள மொழியையும், ஆங்கில ஆசிரியர்கள் அவசியமான கல்விக் கூடங்களில் ஆங்கில மொழியையும் கற்பிக்கும் தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். இதனைவிட அரச பணியாளர்களுக்கு மொழிக் கல்வியைப்

போதிக்கும் சந்தர்ப்பங்களும் இவர்களுக்குக் கிடைக்கும். இது இவர்களுக்கு நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பங்களிக்க வாய்ப்புகளாகவும், தொழில் வாய்ப்புகளாகவும் அமையும். கீழ்வரும் தகைமைகளைக் கொண்டோர் தமது விண்ணப்பங்களை 31.05.2019 திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.இறுதித் திகதி நீடிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்:--

வயதெல்லை 18 தொடக்கம் 40 வயது வரை

க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி உட்பட மூன்று பாடங்களில் திறமைச் சித்தியுடன் கணிதம் உட்பட 06 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல்.க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டாம் மொழி சிங்களத்தில் குறைந்தது சாதாரண சித்தியை பெற்றிருத்தல் அல்லது தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சிங்கள கற்கைநெறியினை (100 மணித்தியாலத்திற்கு மேற்பட்டது) பூர்த்தி செய்திருத்தல் அல்லது அரசகரும மொழிகள் திணைக்களம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சிங்கள கற்கை நெறியினைப் பூர்த்தி செய்திருத்தல்.

க.பொ.த. (உ/த) பரீட்சையில் தமிழ் மொழியில் சித்தி பெற்றிருத்தல் மேலதிக தகைமையாக கொள்ளப்படும்.

க.பொ.த. (சா/த) பரீட்சையில் தமிழ் இலக்கியத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் மேலதிக தகைமையாகும்.

அதேவேளை அடிப்படைத் தகைமைகளை கொண்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தமது முதல் மொழியில் 1/2 மணித்தியால எழுத்துப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்தப்படுவர்.

தெரிவு செய்யப்படுவோர், மொழி ஆசிரியர் கற்கை நெறி பயிற்சிக்கு உள்வாங்கப்படுவார்கள். இக் கற்கைநெறி முழுநேர அல்லது பகுதி நேர (வார இறுதி நாட்கள்) 600 கற்கை மணித்தியாலங்களைக் கொண்டதாக அமையும்.

இக் கற்கை நெறி பயிற்சிக்கான முழுச் செலவினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்வதோடு கற்கை நெறியின் முடிவில் குறித்தகால எல்லைக்குள் பாடசாலையில் இரண்டாம் மொழி ஆசிரியராக சேவையாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடல் வேண்டும்.கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்களுக்கு இரண்டாம் மொழி ஆசிரியராக சேவையாற்றும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும்.

மேற்படி தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகள் விண்ணப்பப்படிவத்தை தயாரித்து பூர்த்தி செய்து (கல்வி மற்றும் ஏனைய மொழித் தகைமைகளுடனான சான்றிதழ்களின் (உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன்) 31.05.2019 திகதிக்கு முன் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ மொழி ஆசிரியர் - பயிற்சி - தமிழ் – 2019 ” மற்றும் வதிவிட மாவட்டத்தை குறிப்பிட்டு அனுப்பப்படல் வேண்டும்.

பணிப்பாளர் நாயகம், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு, இல.321/1, ஹைலெவல் வீதி,மாகும்புர, பன்னிபிட்டிய. தொலைபேசி இல: 0113-092903, 0770333479, 0752840561, 0757422485.

 

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை