உலக கிண்ண போட்டி மத்தியஸ்தர்கள்இ கள நடுவர்கள் விபரம் வெளியீடு

ரஞ்சன் மடுகல்ல 6 தடவையாக பங்கேற்பு

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் கள நடுவர்கள், போட்டி மத்தியஸ்தர்கள் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன, ருச்சிர பல்லியகுருகே ஆகியோர் போட்டி நடுவர்களாக செயற்பட ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவராக கடமையாற்றவிருக்கின்றார். '

இங்கிலாந்தில் இடம்பெறும் உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள், மத்தியஸ்தர்களில் மொத்தமாக 22 பேர் இடம்பெற்றுள்ளனர், அவர்களில் 16 பேர் போட்டி நடுவர்கள் , 6 பேர் போட்டி மத்தியஸ்தர்களின் பெயர் விபரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை கொண்டுள்ள இந்த போட்டி நடுவர்கள், மத்தியஸ்தர்கள் உலகக் கிண்ணத் தொடரின் 48 போட்டிகளிலும் கடமையாற்றவுள்ளனர்.

எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளின் மோதலுடன் ஆரம்பமாகும் உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப போட்டியில் டேவிட் பூன் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்ற, குமார் தர்மசேன மற்றும் புரூஸ் ஒக்சேன்போர்ட் ஆகியோர் போட்டியின் கள நடுவர்களாக பணியாற்றவிருக்கின்றனர். உலகக் கிண்ணத்திற்கான முதல் போட்டியின் மூன்றாம் நடுவராக பெளல் ரெய்பேல் செயற்பட ஜோயல் வில்சன் நான்காம் நடுவராக செயற்படுவார்.

டேவிட் பூன் 1987ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியா வெல்லும் போது அந்த அணியில் இடம்பெற்ற வீரர் என்பதோடு, குமார் தர்மசேன 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். பெளல் ரெய்பல் 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியின் வீரராக இருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கடந்த கால உலகக் கிண்ணத் தொடர்களை வென்ற அணிகளில் இடம்பெற்ற முன்னாள் வீரர்கள் இம்முறைக்கான உலகக் கிண்ணத்தில் கடமையாற்ற வந்திருப்பது விசேட அம்சமாகும்.

மற்றொரு இலங்கையரான ரஞ்சன் மடுகல்ல, ஆறாவது தடவையாக உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் போட்டி மத்தியஸ்தராக இம்முறை இடம்பெறும் உலகக் கிண்ணத்தின் போது கடமையாற்றுகின்றார். மடுகல்ல இம்முறை உள்வாங்கப்பட்டுள்ள போட்டி மத்தியஸ்தர்களில் அதிக அனுபவம் கொண்டவராக காணப்படுகின்றார். அதேவேளை பாகிஸ்தானின் அலீம் தார் இம்முறைக்கான உலகக் கிண்ணம் மூலம் ஐந்தாவது தடவை உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் போட்டி நடுவராக கடமையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தைச் சேர்ந்த போட்டி நடுவரான இயன் குல்ட் இந்த உலகக் கிண்ணத் தொடர் மூலம் நான்காவது தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளில் கடமையாற்றுகிறார். குல்ட் இந்த உலகக் கிண்ணத் தொடருடன் போட்டி நடுவர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கின்றதும் முக்கிய அம்சமாகும்.

இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளுக்கான நடுவர், போட்டித் தீர்ப்பாளர்கள் யார் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பவற்றில் கடமை புரியும் நடுவர், போட்டித் தீர்ப்பாளர்கள் விபரம் பின்னரே வெளியிடப்படும் ஐசிசி தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான போட்டி மத்தியஸ்தர்கள், நடுவர்கள் விபரம் -:–

போட்டி மத்தியஸ்தர்கள்

கிறிஸ் ப்ரோட், டேவிட் பூன், என்டி பைகுரோப்ட், ஜெப் குரோவே, ரஞ்சன் மடுகல்ல, றிச்சி றிச்சர்ட்ஸன்

போட்டி கள நடுவர்கள்

அலீம் தார், குமார் தர்மசேன, மரைஸ் எரஸ்மஸ், கிறிஸ் கப்பானேய், இயன் குல்ட், றிச்சர்ட் இல்லிங்வேர்த், றிச்சர்ட் கெட்டல்போரோஹ், நைஜல் லோங், புரூஸ் ஒக்சன்போர்ட், சுந்தரம் ரவி, பெளல் ரெய்பல், ரொட் டக்கர், ஜோயல் வில்சன், மைக்கல் குஹ், ருச்சிர பல்லியகுருகே, பெளல் வில்சன்.

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை