மரண தண்டனை முடிவில் மாற்றமில்லை

எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் மரண தண்டனை தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றும் அதற்கான திகதி நியமித்தாகிவிட்டது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை பலப்படுத்துவதுடன் மரண தண்டனையை நிறைவேற்றப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி ஒழுக்கமுடைய சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பலமான சட்டம் அவசியம் என்றும் தண்டனைகள் இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

கொழும்பு மட்டக்குளி விஸ்ட்வைக் பார்க் மைதானத்தில் நேற்று (31) இடம்பெற்ற கொழும்பு உயர் மறை மாவட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப் பொருளுக்கு எதிரான மக்கள் பேரணிக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  

பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜோன் அமரதுங்க உட்பட அமைச்சர்கள் மும்மதங்களையும் சார்ந்த மத தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, 

முட்டாள்கள் தினமென்று குறிப்பிடும் இன்றைய தினத்தில் நாம் ஒரு தொன் போதை பொருளை பகிரங்கமாக அழிக்கப்போகின்றோம். நாம் கடந்த வருடமும் ஒரு தொகை போதைப் பொருளை தீயிட்டுக் கொளுத்தினோம். எதிர்வரும் ஏப்ரல் 03ம் திகதி டொரின்டன் சதுக்கத்தில் போதைப் பொருளுக்கு எதிரான பிரமாணத்தை மேற்கொள்ளப்போகின்றோம். அன்றைய தினம் நாட்டிலுள்ள 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள், முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினர் பேதைப் பொருளுக்கு எதிரான இந்த பிரமாணத்தை மேற்கொள்ளவுள்ளனர். இதற்கொன நாம் தனியார் துறையினருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.அரச மற்றும் தனியார்துறை ஊடகங்களின் முழுமையான ஒத்துழைப்பு இதற்கு கிடைக்கவுள்ளது. சகலரும் தமது நிறுவனங்களில் பத்து நிமிடத்தை இதற்காக ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.  

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் நிவாரணம் தொடர்பில் நடைமுறையிலுள்ள வேலைத் திட்டத்தை நாம் பலப்படுத்தவுள்ளோம். இது தொடர்பில் புனர்வாழ்வு அதிகார சபையொன்றை உருவாக்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டுள்ளேன். அடுத்த வெசாக் தினத்திற்கு பின் இந்நாட்டில் கசிப்பு இருக்க முடியாது. அது தொடர்பில் நான் சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளேன். அவ்வாறு கசிப்பு இருந்தால் அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அத்தொகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் அதற்கு பொறுப்பு கூற வேண்டும். நாட்டில் வறுமை அதிகரிப்பது போதைப் பொருளால் தான். பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ள பொதைப் பொருளை ஒழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் நாம் செயற்படுவோம். போதைப் பொருள் பிரச்சினை எமக்கு மட்டும் உள்ளதல்ல. எமது அயல் நாடான மாலைதீவு போன்ற நாடுகளிலும் இது பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் போதைப் பொருள் பாரியளவில் வியாபித்துள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)     

Mon, 04/01/2019 - 11:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை