குண்டுத் தாக்குதலுடன் என்னை சம்பந்தப்படுத்துவது பழிவாங்கும் முயற்சியாகும்

பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவங்களோடு என்னையும் எனது சகோதரனையும் சம்பந்தப்படுத்தி சிலர் என்மீது பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த கைத்தொழில், வாணிபத்துறை நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தற்போது கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் வர்த்தகர் இப்றாஹீமுடன் தனிப்பட்ட வகையில் எனக்கு எந்தவித தொடர்பு கிடையாதெனவும் தெரிவித்தார்.

அவரது அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

வர்த்தகர் இப்றாஹீம் கொழும்பு வர்த்தகர்கள் சங்கத் தலைவராக இருந்தார். இந்த வகையிலேயே அவரை எனக்குத் தெரியும். கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையுடன் சங்கத் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு தொடர்பு காணப்பட்டது. அதை வைத்து அவரது பெயரை எனது அரசியலோடு தொடர்புபடுத்தி எனக்குக் களங்கமேற்படுத்தும் முயற்சிகளை சிலர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தகர் இப்றாஹீமுடனோ, பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களுடனோ எனக்கோ, எனது குடும்பத்தினர்களுக்கோ எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பயங்கரவாதச் செயற்பாடுகளை நான் முழுமையாக எதிர்ப்பவன், விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைக் கூட நாம் எதிர்த்து வந்துள்ளேன். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இன்று மதச் சாயம் பூசப்பட்டுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஒன்று கிடையாது. உயிர்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மிலேச்சத்தனமானதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கொலை மற்றும் தற்கொலை என்பன இஸ்லாமிய மத கோட்பாடுகளின் படி மாபெரும் பாவங்களாகும். எனவே இந்த பயங்கரவாதிகள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களா? என்ற சந்தேகம் எமக்குள்ளது. இவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்திருந்தால் இந்த மிலேச்சத்தனமான செயற்பாட்டை செய்திருக்க மாட்டார்கள். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒரு இலக்கோ நோக்கமோ இருந்தது. ஆனால் இந்த பயங்கரவாத செயற்பாட்டுக்கு என்ன நோக்கம் இருக்கின்றது என எமக்கு தெரியாது. எனினும் இதன் பின்னணியில் சர்வதேச பயங்கரவாதம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மிலேச்சத்தன பயங்கரவாத செயற்பாட்டோடு என்னையும், எனது சகோதரனையும், இணைத்து ஒரு வங்குரோத்து அரசியல்வாதி கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதில் எந்த உண்மையுமில்லை. 52 நாட்கள் இந்த நாட்டில் இடம்பெற்ற அரசியல் புரளியின் போது, உருவாக்கப்பட்ட அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு என்னை இவர் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தவர். நான் அவரது கோரிக்கைக்கு இணங்காததால் அதற்கு பழிவாங்கும் நோக்கத்திலேயே இப்போது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவித்துள்ளார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் இச்சம்பவத்தின் பின்னர் நடந்து கொண்டவிதம், அவரது பேச்சு என்பன இந்த நாட்டு மக்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

அவருக்கு எனது நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எம்.ஏ.எம். நிலாம்

 

 

 

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை