வாகன விபத்து: மதுபோதையில் வாகனமோட்டிய திமுத் கைது

இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஓட்டிய வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில், மதுபோதையில் வாகனம் ஒட்டிய குற்றத்திற்காக அவர் நேற்று கொழும்பு நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி ஓட்டுநருக்கு சிறு காயங்களே ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 5.40 மணி அளவில் பொரளை பகுதியில் கைது செய்ய திமுத் கருணாரத்ன பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொரளை, கின்சி வீதி சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வாரம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். பெரும்பாலும் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு உள்ளது.

விபத்தின் உடனடி விளைவுகள் மற்றும் காயமடைந்த ஓட்டுநரின் நிலைக்கு அப்பால் இந்த கைது கருணாரத்னவின் கிரிக்கெட் வாழ்விலும் பாதிப்பை செலுத்துவதாக உள்ளது.

இது தொடர்பில் மேலதிக விபரங்கள் கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட் சபை காத்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சபையும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

கடந்த பெப்ரவரியில் தென்னாபிரிக்காவில் இலங்கை டெஸ்ட் அணியின் தொடர் வெற்றிக்கு தலைமை வகித்த கருணாரத்னவை உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு தலைவராக நியமிப்பது குறித்து தேசிய தேர்வுக் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் ஒழுக்க நடவடிக்கைகள் குறித்து இலங்கை அணி கடும் சிக்கல்களை எதிர்கொண்ட போதும் கருணாரத்ன இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாதவராக இருந்து வந்தார்.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை