கடும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அல்ஜீரிய ஜனாதிபதி இராஜினாமா

கடந்த பல வாரங்களாக நீடித்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசிஸ் பெளத்பிலிக்கா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் தாம் பதவி விலகுவதாக 82 வயதான பெளத்பிலிக்க வெளியிட்ட அறிவிப்பு அல்ஜீரிய அரச ஊடகத்தில் வெளியாகியுள்ளது. அவரை பதவி விலக்க நடவடிக்கை எடுக்கும்படி இராணுவத் தளபதி அறிவித்து ஒருசில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“மக்களின் மனம் மற்றும் ஆன்மாவை அமைதிப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்வதே எனது நோக்கமாகும். அது அவர்கள் விரும்பும் அல்ஜீரியாவின் சிறந்த எதிர்காலத்திற்கு அவர்களால் கூட்டாக செயற்பட முடியும்” என்று பெளத்பிலிக்கா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக அல்ஜீரியாவில் ஆட்சியில் இருந்த 82 வயது பெளத்பிலிக்கா ஆறு ஆண்டுகளுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மிக அரிதாகவே பொதுமக்கள் முன் தோன்றுகிறார்.

ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து தலைநகர் அல்ஜியர்ஸில் வாகன ஹோன்களை சத்தமெழுப்பி நூற்றுக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அல்ஜீரிய தேசிய கொடியை அசைத்தவாறும் பாடல்களை பாடியும் வீதிகளில் கூடினர்.

அரசியலமைப்பின்படி புதிய தேர்தல் வரை செனட் சபையின் சபாநாயகர் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.

பெளத்பிலிக்கா ஐந்தாவது தவணைக்காக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்ததை அடுத்தே அவருக்கு எதிராக கடந்த பெப்ரவரியில் மக்கள் ஆர்ப்பாட்டம் வெடித்தது.

கடந்த மார்ச் முதலாம் திகதி நாடெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஐந்தாவது தவணைக்கு போட்டியிடும் முடிவை வாபஸ் பெற்ற பெளத்பிலிக்கா பிரதமரை மாற்றியபோதும் ஆர்ப்பாட்டங்களை தணிக்க தவறினார்.

தனது தற்போதைய தவணைக்காலம் முடிவடையும் ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் பதவி விலகுவதாக ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அது போதிய வேகம் கொண்டதல்ல என்று ஆர்ப்பாட்டத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு பலம்மிக்க இராணுவமும் இணக்கம் வெளியிட்டிருந்தது. இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அஹமது கேத் சலாஹ் “காலத்தை வீணடிக்க இன்னும் இடமில்லை” என்று கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

இராணுவம் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தும் அரசியல் முறையை முழுமையாக மாற்றியமைப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை