மதுபானசாலை அமைப்பதை எதிர்த்து பரந்தன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சுத்தமான குடிநீர் கேட்கும் எங்களது கிராமத்திற்கு மதுபானசாலையா தீர்வு எனக் கேட்டு கிளிநொச்சி பெரிய பரந்தன் கிராம மக்கள் ஐந்தாவது முறையாகவும் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக முன்றலில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக நேற்றைய தினம் காலை ஒன்பது மணி தொடக்கம் 12மணி வரை இக் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது "வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம், குடிப்பதற்கு சுத்தமான நீரை வழங்கு மதுபானத்தை அல்ல, குடி நீருக்கு போராடும் எங்களுக்கு மதுபானசாலையா?, பெரிய பரந்தன் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மதுபானசாலை வேண்டாம், மாணவிகள் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் மதுபானசாலை வேண்டாம்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்ததாவது,

தங்களது பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம மக்களும் கடந்த இரண்டு வருடங்களாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் இவ்வாறு புதிய மதுபானசாலை அமைவது எமது வாழ்க்கையைச் சீரழிக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். மதுப் பழக்கத்தை நோக்கி வேகமாக இழுத்துச் செல்லப்படுவதற்கும் இது காரணமாக அமைந்துவிடும்.  

இரண்டு பாடசாலைகள், ஒரு சிறுவர் இல்லம், தனியார் கல்வி நிலையம் என்பன இந்தச் சூழலில் உள்ளன. எனவே இங்கு மதுபானசாலை அமைக்கப்படுவது பொருத்தமற்றது என்றனர்.  

இதேவேளை, கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர், சட்டத்தரணிகள், புதிய மதுபானசாலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் அதிபர்கள், பெரிய பரந்தன் கிராம மக்கள் அமைப்புகள் ஆகியோர் சமுகமளித்து எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.  

மேலும் கரைச்சி பிரதேச செயலர், நில அளவை திணைக்கள அதிகாரிகள், பொலீஸ் அதிகாரிகள், ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். 

Thu, 04/18/2019 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை