தேசிய துக்க தினம் நாடு முழுவதும் மூன்று நிமிடம் மௌன அஞ்சலி

புனித ஈஸ்டர் திருநாளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அரசின் கோரிக்கையின் பிரகாரம் நேற்றுக் காலை 8.30 மணி தொடக்கம் 8.33 மணிவரையிலான 3 நிமிடங்கள் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. புனித ஈஸ்டர் திருநாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் எட்டு இடங்களில் தீவிரவாத குழுக்களால் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தாக்குதல்கள் காரணமாக இதுவரை 300இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் 500இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல் சம்பவங்களை கண்டு முழு உலகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பல நாட்டுத் தலைவர்களும் இத்தீவிரவாதத் தாக்குதலை கண்டித்துள்ளதுடன், தமது சோகத்தையும், கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல், உலகின் பல்வேறு நாடுகளிலும் இலங்கையில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சிசபைகள், மாகாண சபைகள், அமைச்சுகள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள், பொது இடங்கள் மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளைக்கொடி பறக்க விட்டிருந்ததுடன், தேசியக் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை