கோட்டாவின் இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் மேலும் சிக்கல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் மேலும் தீவிரமடைந்து வருவதாகத் தெரியவருகிறது. தனது அமெரிக்க பிரஜாவுரிமையை அவர் கைவிடத் தீர்மானித்தாலும், இலங்கை பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கைகளிலேயே தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட விண்ணப்பித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் பிரஜாவுரிமையை மாத்திரம் தான் கொண்டுள்ளார் என்பதை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சே உறுதிசெய்ய வேண்டும்.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட வேண்டும். இதற்காக அவர் விண்ணப்பம் செய்துள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே கோட்டாபயவுக்கு இலங்கையிலும் சட்டச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சே குடியுரிமை தொடர்பான விவகாரங்களை கையாளுகிறது. குடியுரிமை வழங்குதல், இரட்டைக் குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்த அமைச்சுக்கே இருக்கிறது.

1987ஆம் ஆண்டு 45ஆம் இலக்க குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் 2 பிரிவின் 7வது உபபிரிவின் கீழ் அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. "பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துவதற்கு விண்ணப்பிக்கும் நபர் இலங்கைக்கு பிரயோசனம் அற்றவர் எனக் கருதும் பட்சத்தில் அந்த நபரின் பிரஜாவுரிமைக்கான விண்ணப்பத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு உள்ளது" என சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக கோட்டாபய ராஜபக்ஷ சிக்கல்களுக்கு முகங்கொடுக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மேற்கொள்வதற்காக சில வேளைகளில் அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை