தீவிரமடைந்துள்ள மத பயங்கரவாதம் உலக பயங்கரவாதத்திற்கு ஒப்பானது

சர்வதேச உதவியுடன் முறியடிக்க திட்டம்

நாடு எதிர்கொண்டுள்ள உலக பயங்கரவாதத்தை முறியடிக்க சர்வதேச நாடுகளின் உதவிகளுடன் நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா, சீனா உட்பட சர்வதேச நாடுகள் பல இலங்கைக்கு உதவ தயாராகவுள்ளதாக சபையில் சுட்டிக்காட்டிய பிரதமர், சர்வதேச நாடுகளின் உதவிகளை உச்ச அளவில் பயன்படுத்திக்கொள்வது அவசியமென்றும் தெரிவித்தார்.

1983 பயங்கரவாதத்திற்கு சிறிதளவு தமிழர்களே ஆதரவாக செயற்பட்டனர். அதனை இனவாதம் போராட்டமாக முன்னெடுத்ததாலேயே அது பலவருடங்கள் தொடர்ந்தது என்றும் தற்போதைய சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகொள்வது அவசியமென்றும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான இந்த விசேட பாராளுமன்ற அமர்வில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலும் மேலும் சில பிரதேசங்களிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பிலும் அது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரதமர் சபையில் தெளிவுபடுத்தினார். மேற்படி விசேட பாராளுமன்ற அமர்வில பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் உரையாற்றினர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

இன்று நாம் உலக பயங்கரவாதத்திற்குள் அகப்பட்டுள்ளோம். இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இந்த உலக பயங்கரவாதத்தின் பிரிவினரே.

தற்போது நாம் எதிர்கொள்ள நேர்ந்துள்ள நிலைமையானது கடந்த காலங்களை விட வித்தியாசமானது. அன்று நாட்டில் யுத்தம் இடம்பெற்றது. அடிமட்டத்திலிருந்து பெரும் மோதல்கள் இடம்பெற்றன. அந்த மோதல்களில் நாம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் யுத்தத்தை வெற்றிக்கொண்டிருக்க முடியாது. அது கெரில்லா மற்றும் சம்பிரதாயமுறையான யுத்தமாகும். அத்துடன் தற்கொலைத் தாக்குதல்களும் இடம்பெற்றன. 2009இல் யுத்தம் நிறைவுபெற்றதோடு விமானத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்தும் முடிவுக்கு வந்தன. அதனை விட ஒரு வித்தியாசமான பயங்கரவாதத்தையே தற்போது நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. அன்று அரசியல் நோக்கில் செயற்பாடுகள் இடம்பெற்றன. தற்போது அதுபோலன்றி வித்தியாசமான நிலையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இந்த உலக பயங்கரவாதத்திற்கான சிறந்த உதாரணம் ஐக்கிய இராஜ்ஜியத்தில் கடந்த 50 வருடங்களாக சம்பிரதாய யுத்தமே இடம்பெற்றது.

வட அயர்லாந்திலும் பயங்கரவாத யுத்தம் இடம்பெற்றது. வட அயர்லாந்திலும் பயங்கரவாத யுத்தம் இடம்பெற்றது. இவை முடிவுற்றுள்ள நிலையிலேயே தற்போது உலக பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

இன்னும் இது டிஸ்னிவேர்ல்டாக மாறவில்லை. உலக பயங்கரவாதத்தை விட தற்போது மதத்தை அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாதம் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பில் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை மத பயங்கரவாதமாக அன்றி உலக பயங்கரவாதமாகவே கருத வேண்டும் என அந்த நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இப்போதுள்ள இந்த பயங்கரவாதம் அமைப்பு ரீதியான தொடர் பயங்கரவாதமாகும். இது நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்கொலைதாரிகளை செயற்படுத்துவோர் இவர்களில் உள்ளனர்.

தற்போது எமது பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்து தடுத்து வைப்பதற்கான அதிகாரம் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது பலரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து முக்கிய பல தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தாக்குதல்களுக்கு முஸ்லிம் மக்கள் எதிரானவர்கள். அதேபோன்று அனைத்து இன மக்களும் இதற்கு எதிராக செயற்படுவது அவசியமாகும்.

1983விலும் தமிழ் மக்களில் சிலரே பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தனர். அது இனவாதப் போராட்டம் என்பதால் அது வேறு திசையில் சென்று பல வருடங்களாக நீடித்தது. பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. எகிப்திலிருந்து ஆரம்பமான இந்த பயங்கரவாதம் தற்போது எமது உல்லாசப் பிரயாணத்துறையை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றது.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் எமது பொருளாதாரம் சிறப்பாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் எமது பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் சுற்றுலாத்துறையைப் பாதுகாக்கவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மேலும் 30 வருட யுத்தமொன்றுக்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

ஐ. நா. பொதுச் செயலாளர் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அனைத்து நாடுகளும் எமக்கு உதவ தயாராகவுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிங்கப்பூர் பிரதமர், இந்தியப் பிரதமர், நேபாளப் பிரதமர், பாகிஸ்தான் பிரதமர், ஜப்பானியப் பிரதமர் அவுஸ்திரேலியா, சுவீடன் பிரதமர், ரஷ்ய பிரதமர், சீனப் பிரதமர் ஆகியோரும் எமக்கு உதவுவதற்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை