புத்தளத்தில் கூடுதலான மகளிர் அணிகள் பங்கேற்ற கால்பந்தாட்ட தொடர்

புத்தளம் வலய கல்வி காரியாலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் 20 வயதுக்குட்பட்ட மகளிர்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் மயிலங்குளம் சிங்கள மஹா வித்தியாலய மாணவிகள் அணியினர் சம்பியனாகியுள்ளனர்.

தொடரின் இரண்டாம் இடத்தினை கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க மஹா வித்தியாலயமும், மூன்றாம் இடத்தை ஆண்டிமுனை தமிழ் மஹா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.

இந்த போட்டிகள் யாவும் அண்மையில் புத்தளம் தில்லையடி மு.ம.வி.மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் கல்வி வலய வரலாற்றில் கூடுதலான மகளிர் அணிகள் கால்பந்தாட்ட போட்டி தொடரில் பங்கேற்றமை இதுவே முதன்முறையாகும்.

விலக்கல் முறையிலான இந்த தொடரில் முதலாவது அரை இறுதி போட்டி மயிலங்குளம் சிங்கள மஹா வித்தியாலய அணிக்கும், ஆண்டிமுனை தமிழ் மஹா வித்தியாலய அணிக்குமிடையில் நடைபெற்றபோது இரு அணிகளுமே கோல்களை போடாத நிலையில் நடைபெற்ற பெனால்டி உதையில் மயிலங்குளம் சிங்கள மஹா வித்தியாலய அணி 04 : 03 கோல்களினால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பண்டாரநாயக்க புரம் சிங்கள மஹா வித்தியாலய அணிக்கும், கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க மஹா வித்தியாலய அணிக்குமிடையில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் இரு அணிகளுமே கோல்களை போடாத நிலையில் நடைபெற்ற பெனால்டி உதையில் கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க மஹா வித்தியாலய அணி 03:02 கோல்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மயிலங்குளம் சிங்கள மஹா வித்தியாலய அணிக்கும், கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க மஹா வித்தியாலய அணிக்குமிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 02 : 01 கோல்களினால் மயிலங்குளம் சிங்கள மஹா வித்தியாலய அணி வெற்றி பெற்றதன் மூலம் அவ் அணி முதலாம் இடத்தினை பெற்று சம்பியனாகியதோடு இரண்டாம் இடத்தினை கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க மஹா வித்தியாலய அணி பெற்றுக்கொண்டது.

பண்டாரநாயக்கபுரம் சிங்கள மஹா வித்தியாலய அணிக்கும், ஆண்டிமுனை தமிழ் மஹா வித்தியாலய அணிக்குமிடையில் நடைபெற்ற மூன்றாம் இடத்தினை தெரிவு செய்வதற்கான போட்டியில்ஆண்டிமுனை தமிழ் மஹா வித்தியாலய அணி 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்றதன் மூலம் ஆண்டிமுனை தமிழ் மஹா வித்தியாலய அணி மூன்றாம் இடத்தினையும், பண்டாரநாயக்க புரம் சிங்கள மஹா வித்தியாலய அணி நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

வலய கல்வி பணிமனை சார்பாக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் இந்த போட்டி தொடரினை ஒழுங்கமைத்திருந்தார்.

புத்தளம் தினகரன் நிருபர்

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை