நாளை பிறக்கும் விஹாரி வருடம் அனைவருக்கும் சுபிட்சம் தரட்டும்

காரி ஆண்டு நாளை பிறக்கின்றது.ஒரு ஆண்டை சௌரமானம், சந்திரமானம் என இரு முறைகளில் கணிக்கலாம். இவற்றில் சௌரமானம் கணிப்பின்படி சூரியன் மேட ராசியிலிருந்து மீனராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சங்சரிக்கும் காலங்களைச் சூரிய மாதமாகக் கணக்கிட்டு, சித்திரை முதல் பங்குனி ஈறான பன்னிரு மாதங்களை கொண்டமைந்ததை ஓராண்டு எனக் கொள்கின்றோம். இதுவே தமிழர்களுக்கும் பௌத்தர்களுக்கும் புத்தாண்டு என சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

சூரியன் மேட ராசியில் புகும் தமிழ்ப் புத்தாண்டை குறித்து நிற்கும் இரு நிகழ்வுகளை இங்கு சுட்டிக்காட்டுவது சிறப்பானது எனக் கொள்ள முடியும். இதில் முதலாவது பிரம்மா சித்திரை மாத முதல் நாளில்தான் தனது படைப்புத் தொழிலை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. அடுத்தது வட திசை நோக்கிச் செல்லும் சூரியன் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய மூலஸ்தானத்தை கடந்து செல்லும் தினம் சித்திரை முதல் நாள் ஆகும்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரை வாழ்க்கை வேறு சமயம் வேறல்ல. சமயம் சார்ந்ததுதான் வாழ்க்கை. வாழ்வில் இறையுணர்வை வளர்த்துக் கொள்ளவும், அதன் மூலமாக சிந்தனை, சொல், செயல் என்னும் உயர்ந்த நோக்கத்தை அடையவும் இதனுடன் இணைந்ததாக விரதங்கள், பண்டிகைகள், ஆலய உற்சவங்கள் யாவுமே மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன எனலாம்.

ஆறு பருவங்களிலும் சிறந்தது இளவேனிற் காலம், பசியும் பிணியும் நீங்கி வகியும் வளமும் பெருகும் காலம்...இதுவே இளவேனிற்காலத்தை எடுத்தியம்பி நிற்பது. சித்திரை ருதுக்களில் வசந்த ருதுவாக இருக்கின்றேன் என்று கீதையில் கண்ணன் கூறும் காலம், சித்திரை நட்சத்திரம் பூரணையோடு கூடிய காலம். இக்காலத்தில் சூரியன் மேட இராசிக்குள் புகுகின்றான். சித்திரை புத்தாண்டும் மலர்கின்றது. இங்கே வானசாஸ்திரமும் சமய நம்பிக்கையும் சங்கமிக்கின்றன.

இந்துக்கள் எக்காரியத்தை தொடங்குவதற்கும் நாள் கோள் நட்சத்திரங்கள் பார்த்தே ஆரம்பிப்பர். இதை துல்லியமாக கணித்து சாதாரண பாமர மக்களும் விளங்கிக் கொள்ளும் விதமாக அமையப் பெற்றுள்ளதே பஞ்சாங்கம் எனலாம். இது புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே சோதிட மேதைகளால் கணித்து அச்சுப்பதிப்பாக கிடைக்கின்றது.

எமது நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம்,திருக்கணித பஞ்சாங்கம் என இரு பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன. வாக்கிய பஞ்சாங்கம் வெ. இரகுநாதையராலும் திருக்கனித பஞ்சாங்கம் சி. ஜெகதீஸ்வர சர்மாவினாலும் வெளியிடப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டு சித்திரை மாதம் உதயமாகும் வருடத்தின் பெயர் விகாரி என்பதாகும். இப்பெயர் கொண்ட வருடமானது கடந்த 1959_- 60 ஆண்டுகளிலும் பிறந்திருக்கின்றது. பொதுவாக 1959_- 60 களில் எவ்வாறான பலாபலன்களை நாட்டிற்கு தந்து விடைபெற்றதோ அதேபோன்ற நிலையினை இப்புத்தாண்டில் நாம் அனுபவிக்க முடியும் எனக் கொள்ள இடமுண்டு.

இனி புத்தாண்டு பிறப்பை பற்றி நோக்குவோம்

'பார விகாரி தனிற்

பாரணநீ ருங்குறையும்

மாரியில்லை வேளாண்மை

மத்திமமாம்- சோரர்

பயமதிக முண்டாம்

பழையோர்கள் சம்பாத்திய

வுடைமை விற்றுண்பார் தேர்'

என்கின்றது விகாரி வருடப் பாடல்.

வருடப் பிறப்பானது நாளை (14.04.2019) அதாவது சித்திரை 01 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01 மணி 12 நிமிடத்திற்கு விகாரி என்னும் பெயருடைய தமிழ்ப் புத்தாண்டு ஆயிலியம் 2ம் பாதத்தில் உதயமாகின்றது. விஷு புண்ணிய காலம் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி 12 நிமிடம் முதல் பிற்பகல் 5.12 மணிவரையுள்ள காலமாகவுள்ளது.

மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்தற்கு நாளை ஞாயிறு மு. பகல் 9.12 மணி முதல் 5.12 மணிவரையுள்ள காலத்திற்குள் யாவரும் விதிப்படி சிரசில் ஆலியையும் காலில் இலவமிலையும் வைத்து மருத்து நீரை கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று பெற்றோர் குரு பெரியோர்களைக் கெண்டு தேய்ப்பித்தல் சிறப்பானதாகும்.

சங்கிரம தோஷ நட்சத்திரங்களான புனர்பூசம் 4ம் கால் பூசம் ஆயிலியம் கேட்டை மூலம் புராடம், உத்தராட 01ம் கால், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களை செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்தல் சாலச் சிறப்புடையது.

விகாரி வருடத்தின் ஆடை ஆபரணங்களைப் பார்ப்போமாக இருந்தால் வெள்ளை நிறம் உள்ள பட்டாடை அல்லது வெள்ளை, சிவப்புக்கரை அமைந்த பட்டாடையையும், முத்துமாணிக்கம் இழைத்த ஆபரணங்களையும் அணிந்து கொள்வது நல்லது.

தமிழர்கள் வாழ்வில் வருடப்பிறப்பிற்கு அடுத்ததாக கைவிசேஷத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் காணப்படுகின்றது. இதற்குரிய சுபநேரங்களாக சித்திரை முதல் நாள் (14.04.2019) ஞாயிறு இரவு 10.31 முதல் 11.15 வரையும், சித்திரை 04 (17.04.2019) புதன் பகல் 10.18 முதல் 11.51 மணி வரையும், சித்திரை 05 (18.04.2019) வியாழன் பகல் 9.47 முதல் பகல் 11.46 வரையுமான காலமாகச் சொல்லப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டவை யாவும் வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிப்பட்டவையாகும்.

திருக்கணித பஞ்சாகத்தை நோக்குவோமாக இருந்தால்- விகாரி வருஷடம் சித்திரை 01ம் நாள் (14.04.2019) ஞாயிற்றுக்கிழமை பகல் 2.09 மணிக்கு பிறக்கின்றது. 60வது வருட சுற்றில் 33வது வருடமாக உள்ள இந்த விகாரி வருடப்பிறப்பின் புண்ணியகாலமாக பகல் 10.09 மணி முதல் மாலை 6.09 மணிவரையான காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்புண்ணிய காலத்தில் தலையில் இலவமிலையும் காலில் விளா இலையும் வைத்து ஸ்நானம் செய்து சிவப்பு நிறப்பட்டாடையாயினும் அல்லது சிவப்புக்கரை வைத்த வெண்நிற புது வஸ்திரமாயினும் தரித்து மாணிக்கம் சேர்த்திழைத்த ஆபரணங்களை அணிந்து சூரியனுக்கு புதுவருட பொங்கலிட்டு சர்க்கரைப் பொங்கலுடன் வேப்பம்பூ, இஞ்சி, மிளகு முதலியவற்றுடன் அறுசுவை உணவுண்ணுதல் சிறப்பானது.

சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம், ஆயிலியம், கேட்டை, மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம், ரேவதி ஆகியனவாம்.

வருட ஆதாய விடயங்களை நோக்குகையில் வாங்கிய பஞ்சாகத்தில் சொல்லப்பட்டதையே திருக்கணித பஞ்சாங்கமும் கூறுகின்றன.

இந்துக்கள் யாவரும் அவரவர் குலவழக்கப்படி கைக்கொள்ளும் பஞ்சாங்கத்தின்படி புதுவருட கருமங்களை கைக்கொள்வதுடன் வருட பலாபலன்களை வாசித்தும் கேட்டும் அறிந்து வாழ்வில் தர்மம் தழைத்தோங்க இயன்றவரை முற்பட வேண்டும்.

 

Sat, 04/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக