இ.தொ.காவை உள்வாங்கவும் முடிவு; எந்தத் தேர்தலையும் சந்திக்கத் தயார்

நுவரெலியாவில் பிரதமர் ரணில்
தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது முடிந்து போன விடயம். அது குறித்து இனிமேலும் யோசிப்பது அர்த்தமற்றது எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு முகம் கொடுக்கும் காலம் நெருங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஜனநாயக வழிமூலம் ஆட்சியை நிலைப்படுத்துவதே ஐக்கிய தேசிய முன்னணியின் இலக்கு எனவும் ஜனநாயகத்தை விரும்பும் நேச சக்திகளுடன் இணைந்து தேர்தல்களுக்கு முகம் கொடுக்கத் தயாராகுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை நுவரெலியாவில் உள்ள பிரதமர் வாசஸ்தலத்தில் மத, கலாசார விழுமியங்களுடன் கொண்டாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த சில தினங்களாக அங்கு தங்கியிருந்து விடுமுறையைக் கழித்துவரும் நிலையில், அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலருடனும் பிரதேச அரசியல் பிரமுகர்களுடனும் கலந்துரையாடி வருகின்றார். தம்மைச் சந்தித்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுடன் கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிக்கின்றார்.
ஆளும் தரப்பிலிருந்து சிலரை விலைக்கு வாங்கி தேசிய அரசை அமைக்க பொதுஜன ஐக்கிய முன்னணியின் சிலர் முயற்சிப்பதாக தமக்கு அறியவந்ததாகத்

தெரிவித்திருக்கும் பிரதமர் தேசிய அரசு என்ற கதை பழங்கதையாகியுள்ளதாகவும் இனிமேலும் அதுபற்றிப் பேசுவது அர்த்தமற்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலையோ மாகாண சபைகளுக்கான தேர்தலையோ சந்திக்க வேண்டியிருப்பதால் நாம் தேர்தலுக்கு முகம்கொடுக்கத்தயாராக வேண்டும்.

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கின்றார். பெரும்பாலும் முதலில் ஜனாதிபதி தேர்தலையே சந்திக்க நேரிடலாம் என சூசகமாகக் குறிப்பிட்டிருக்கும் பிரதமர், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது உரிய நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவாரென்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்தே ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கியிருக்கின்றோம்.

மேலும் சில கட்சிகள் விரைவில் எம்மோடு இணையவுள்ளன. முக்கியமாக இ. தொ. கா.வும் எமது முன்னணியுடன் இணையவிருக்கின்றது. இ. தொ. கா. இணைவதால் எவருக்கும் பாதகம் எற்படப் போவதில்லை. நாம் ஒன்றுபட்டுச் செயற்படும் போது எமது பலம் அதிகரிக்கும் என்பதை இங்கு பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மலையகத்தில் பிரதானமான தொழிற்சங்கங்கள் ஒன்றுபடும்போது மக்கள் சக்தி எம் பக்கம் அணி திரளும் எனவும் அது எமது முன்னணியை பலப்படுத்தும் எனவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கின்றார். இதுவிடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.

சிலர் ஐக்கிய தேசியக் கட்சியை சின்னாபின்னப்படுத்தும் பணியை பொறுப்பேற்றுள்ளனர்.அது ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ஒருவரைக்கூட அவர்களால் ஈர்த்தெடுக்க முடியாது. எமது பிரச்சினைகளைக் கட்சிக்குள் பேசித்தீர்வு காண்போம். யார் முயற்சித்தாலும் ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

 

எம். ஏ. எம். நிலாம்
 

Thu, 04/18/2019 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை