புலமைப்பரிசில் பரீட்சையில் கூடுதல் புள்ளி பெற்ற மாணவிகளுக்கு வீடுகள்

இராணுவத்தினர் நிர்மாணித்து கையளிப்பு

வவுனியாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற வறுமைக் கோட்டிற்குட்பட்ட இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தால் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன. வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் ஆலோசனை வழிகாட்டலில், ஐக்கிய நாடுகள் அமையத்தில் பணியாற்றும் குருநாகலையைச் சேர்ந்த சந்தன அழககோன் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஆகியோரின் நிதி உதவியுடன் இரண்டு வீடுகள் அமைக்கப்பட்டு நேற்று குறித்த பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற வவுனியா சிவபுரம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஹரிதிக் ஹன்சுஜா மற்றும் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த ஆர்.நிவர்சனா ஆகியோர் வறுமை கோட்டுக்கு உட்பட்ட நிலையில், நிரந்தர வீடு இல்லாமல் படிப்பை முன்னெடுக்க மிகவும் சிரமப்பட்டார்கள்.

இதனால் அப்பிள்ளைகளின் தேவை குறித்து அறிந்து கொண்ட இராணுவத்தினர் அவர்களுக்கு நிரந்தர வீடு அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன்படி வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிற்குத் தேவையான நாற்காலிகள், மேசைகள், சமையல் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டுதோட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு மாணவிகளும் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மாதாந்தம் 2500 ரூபாய் வீதம் பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் வரை நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விசேட நிருபர் 

 

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை