யுத்தம் இல்லாத காலத்தில்தான் முப்படையையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டினாலும் யுத்தம் இல்லாத காலத்தில் தான் முப்படையையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் மகாவலி அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதியின் தலைமையில் போதைப் பொருள்களை ஒழி்கக நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2020 ஆம் ஆண்டில் 17 மீற்றர் நீள படகுகளை நாமே உற்பத்தி செய்து கரையேற பாதுகாப்பிற்கு வழங்க இருக்கிறோம். இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார். யுத்தம் இல்லாத காலப்பகுதியில் தான் முப்படையை மேம்படுத்த வேண்டும். யுத்த காலத்தில் இதனை மேற்கொண்டால் பிரச்சினை எழும். எதிர்காலத்தில் யுத்தம் ஏற்படுவதை தடுக்க இவ்வாறான நடவடிக்கை அவசியமாகும்.

வடக்கு, கிழக்கில் படையினர் வைத்துள்ள காணிகளை மீள வழக்கினால் வேறு இடத்தில் அந்த முகாமை அமைக்க வேண்டும். இதற்கும் நிதி அவசியம். இராணுவத்தினரின் சம்பள விவகாரம், அங்கவீனமுற்ற படையினரின் நலன்புரி செயற்பாடுகள் என்பவற்றிற்கும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜோன் அமரதுங்க

போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில் எடுக்கும் முயற்சிகள் விசேடமானது. இதற்கு அனவைரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொலிஸாருக்கு வழங்கும் உள்ளார்ந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்கான பதவியுயர்வுகளை வழங்குவதில் சரியானதொரு பொறிமுறையொன்று பின்பற்றப்பட வேண்டும்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் (த.தே.கூ)

மாகாவலி திட்டத்தின் கீழ் காணிகள் எடுக்கப்படும் விடயம் தொடர்பில் இரண்டு வார காலத்தில் முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். பூர்வீகமான காணிகளை அவர்களை கூலியாட்களாகப் பணிப்பதற்கு மகாவலி அதிகாரசபை முயற்சிக்கிறது. தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், அமைச்சரைச் சார்ந்த பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொது மக்களின் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. மகாவலி நீர் இன்னமும் முல்லைத்தீவுக்கு கொண்டுவரப்படாதபோதும் அங்குள்ள காணிகள் பறிக்கப்படுகின்றன. காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருப்பதால் தமக்குத் தேவையான காணிகள் பறிக்கப்படுகின்றன. இதனால்தான் மாகாண அரசாங்கங்கங்கள் காணி அதிகாரத்தை தமக்குத் தருமாறு கோருகின்றன.

முசலி பிரதேசத்தின் காயாக்குழி பிரதேசத்தில் இந்தியாவிலிருந்து மீள நாடு திரும்பியவர்கள் தமது சொந்தக்காரர்களுடன் தங்கியிருக்கின்றனர். இவர்களின் சொந்தக் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரிடம் உள்ளன. இவற்றை விடுவிப்பதற்கு வன இலாகாத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டான் குளத்தை அபிவிருத்தி செய்ய பிரதமர் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். எனினும் இதனை புனரமைக்க வன இலாகாத் திணைக்களம் அனுமதி வழங்கவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஹிந்த அமரவீர (ஐ.ம.சு.மு)

மகாவலி காணிப் பிரச்சினை தொடர்பில் நீண்டாக இழுபறி காணப்படுகிறது. மகாவலி அமைச்சராக ஜனாதிபதி பொறுப்பேற்ற பின்னர் மகாவலி காணிகளைப் பெற்றவர்களுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தயாசிறி ஜயசேகர (ஐ.ம.சு.மு)

700 ரூபா கொடுப்பனவுக்காக பொலிஸார் பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். பொலிஸ் அத்தியட்சர்கள் தொடர்பில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும். பதவி உயர்வுகள் வழங்கப்படுவதிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன. இவை தீர்க்கப்பட வேண்டும்.

எஸ்.எம். மரிக்கார் (ஐ.தே.க)

போதைப் பொருள் பிரச்சினையை முடிவு கட்ட எடுக்கும் நடவடிக்கையின் நற்பெயரை சு.க பெற முயல்கிறது. இதற்கு ஜனாதிபதி தலைமை வழங்கினாலும் கடந்த காலத்தில் சாகல ரத்னாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார போன்றோரும் காத்திரமான நடவடிக்கைகள் எடுத்திருந்தார்கள். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர்போதைப் பொருளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எமது பிரதேச குப்பைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். இன்றேல் வீதியில் இறங்கி போராட நேரிடும்.

பீல்ட் மாசல்

சரத் பொன்சேக்கா (ஐ.தே.க)

மாவில் ஆறுபிரச்சினை தொடங்கிய போது நான் சிங்கப்பூரில் ஆஸ்பத்திரியில் இருந்தேன். கோத்தபய என்னுடன் பேசினார். நான் திருமலை கட்டளை தளபதியுடன் பேசிவிட்டு தாக்குதலுக்கு தயார் என்றேன். அரசியல்வாதிகள் உறுதியாக முடிவு எடுக்க வேண்டும். அதனை அதிகாரிகள் சரிவர நிறைவேற்ற வேண்டும்.

வியாழேந்திரன் (த.தே.கூ)

இராணுவத்தின் கீழ் இருக்கும் பாடசாலைகளை 2018 டிசம்பர் 31 ற்கு முன்னர் விடுவிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். அதனை செயற்படுத்த வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள இராணுவ முகாமிற்கு குடியிருப்பு மற்றும் வாழ்வாதார காணிகள் பெறப்பட்டுள்ளன. இங்குள்ள பாடசாலை காணியை விடுவிக்க வேண்டும். வாகரை காயங்கேணி சரஸ்வதி வித்தியாலய காணி கூகுல் வரைபடம் பார்த்து வன இலாகா காணி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து செயற்படும் இவர்கள் பிரதேச அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது கிடையாது.

இராஜாங்க அமைச்சர்

அஜித் மான்னப்பெரும

காட்டு வளத்தை அதிகரிக்கும் பிரகடனத்தில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். 45 வீதமாக இருந்த வனவளம் 1.5 வீதத்தினால் குறைந்த வந்தது. சுற்றாடலை நாசம் செய்வதாக ஒரு குழு பொய்பிரசாரம் செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு அங்குலம் காணியும் வழங்கப்படவில்லை. ஆனால் பாரிய கடழிப்பு நடைபெறுவதாக கோசம் முன்வைக்கப்படுகிறது.

குறுக்கீடு இராஜாங்க அமைச்சர்

நிரோசன் பெரேரா

வில்பத்து தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற குழுவொன்றை அமைத்து மக்களுக்கு அறிவூட்ட வேண்டும். சிலர் இதனை பயன்படுத்தி இனவாத்தை தூண்டி வருகிறார்கள்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய

அந்த அறிக்கை சுற்றாடல் தொடர்பான துறைசார் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்ம்ன கிரியெல்ல

கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டி இது தொடர்பில் முடிவு செய்ய முடியும். 2012 இல் தான் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. எமக்குதெரிவுக் குழுவொன்றை நியமிக்க முடியும்.

இராஜாங்க அமைச்சர்

அஜித் மான்னப்பெரும

தேர்தல் காலத்தில் 20 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எமது ஆட்சியில் முழுமையாக ஆராய்ந்து தான் மரம் வெட்ட அனுமதி வழங்கப்படுகிறது என்றார்.

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை