தேசிய நெல் உற்பத்தியில் நாடு வரலாற்று சாதனை

"நாட்டுக்காக ஒன்றிணைவோம்" செயற்றிட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு வெபர் அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்கள், வாழ்வாதார உதவிகளுக்கான காசோலைகள் என்பன ஜனாதிபதியால் வழங்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படங்கள். (படங்கள்: வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.நூர்தீன், விஜயரத்னம், பத்மஸ்ரீ)

'கட்சி, இன, மத, வேறுபாடுகளின்றி நாட்டுக்காக ஒன்றிணைவோம்'

 நாட்டுக்குள் போதைப்பொருள் கிழக்கிலிருந்தே அதிகம் வருகிறது

மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

அரசியல் கட்சி பேதங்களுக்கப்பால் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும். மொழி, மத வேறுபாடுகளை மறக்க வேண்டும். அதற்காகத்தான் நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற இந்த வேலைத்திட்டத்தை தெரிவு செய்தோமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ செயற்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நேற்று 12 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதன் இறுதி நாள் நிகழ்வான நேற்று பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டிற்காக ஒன்றினைவோம் என்ற இந்த வேலைத்திட்டத்தை முதன் முதலாக புத்தளத்தில் ஆரம்பித்து வைத்தோம்.

இதேபோன்று, புத்தளத்திலும் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். இன்னும் செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கூடுதலாக செயற்றிட்டங்களை செய்திருக்கிறோம் இந்த வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்துள்ள மாவட்டங்களிலே ஒரு விஷேட தன்மை இருக்கின்றது.

இந்த வேலைத்திட்டத்திற்காக புத்தளம் முதலாவதாகவும் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவதாகவும் மூன்றாவதாக திருகோணமலை மாவட்டத்தை தெரிவு செய்தேன்.

இந்த மாவட்டங்களில் அபிவிருத்தியில் பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. இம் மாவட்டங்களில் வேலை செய்வதற்கு அரசாங்கத்தின் அமைச்சரவையில் உறுப்பினர் ஒருவர் இல்லை. அதனால் தான் இந்த வேலைகளில் தாமதம் ஏற்படுகின்றது.

ஒதுக்கப்படும் பணம் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர்கள், ஆளுனர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் கிராமம் கிராமமாக செல்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமம் தோறும் சென்று 842க்கு மேமற்பட்ட வேலைத்திட்டங்களை செய்துள்ளதுடன் சில திட்டங்களை ஆரம்பித்தும் வைத்துள்ளார்கள்.

பொதுவான அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, நிர்மாணத்துறை அபிவிருத்தி செய்வது மாத்திரமல்ல கிராம சக்தி வேலைத்திட்டம் மூலமாக இன்னும் பல வேலைகளை செய்திருக்கின்றோம்.

போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்களை நாம் செய்து வருகின்றோம்.

சட்டவிரோதமான போதைப் பொருட்களான கொக்கேன், ஹஸீஸ் போன்ற போதைப் பொருட்கள் சட்ட விரோதமான போதைப் பொருட்க என்பதை அறிவீர்கள்.

இந்தப் போதைப் பொருட்கள் அனைத்தும் கிழக்கு மாகாணத்தில் இருந்துதான் நாட்டுக்குள் வருகின்றன. முப்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பொலிஸார், கடலோர பாதுகாப்பு படையினர், சுங்கத்திணைக்களத்தினர் அனைவரும் இதை ஒழிக்க மும்முரமாக பணியாற்றி வருகின்றார்கள்.

போதைப் பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு நிச்சயமாக தேவைப்படுகின்றது.

சிறுநீரக நோய் மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

சிறு நீரக நோயை தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பெருமளவான பணத்தை செலவு செய்து வருகின்றோம்.

பொலன்னறுவையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் சிறு நீரக நோய் தடுப்புக்கான வைத்தியசாலையொன்றை திறந்துள்ளோம்.

ஸ்மார்ட் ஸ்ரீலங்கா என்ற அலுவலகத்தை திறந்துள்ளோம். அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லாத பல இளைஞர் யுவதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்காக வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு வழிகாட்டல் நிலையமாக இந்த அலுவலகம் செயற்படவுள்ளது.

நமது நாட்டில் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்று பட வேண்டும். போதைப் பொருள் போன்று மிக மோசமாக விடயங்களுக்கு எல்லாம் பிள்ளைகள் ஆளாகின்றார்கள்.

பிள்ளைகளுக்கு பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன.

பாதைகளை சீரமைத்து செப்பணிடும் போது எந்த பாதைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்து முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

இந்த வேலைத் திட்டங்களுக்கு அனைவரின் ஒத்துழைப்புக்களும் அவசியமாகவுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரமே உள்ள நிலையில் நான் உங்களை மட்டக்களப்பில் சந்திக்கின்றேன்.

தமிழ், சிங்கள புத்தாண்டையொட்டி சுப நேரத்தில் ஒரு மரக்கன்றை நடுமாறு நான் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த கால கட்டத்தில் இந்த நாட்டில் பெரும் வரட்சி நிலவுகின்றது. இருப்பினும் ஒரு சாதனையை நாம் படைத்துள்ளோம். 2018 /2019 ஆம் ஆண்டுகளில் பெருமளவில் நெல் விளைச்சலை நாம் வரலாற்றில் முதற்தடவையாக பெற்றிருக்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற் செய்கை செய்கின்ற பலர் இருக்கின்றார்கள். அந்த விவசாய பெருமக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மன்னர் காலத்திலிருந்து இது வரைக்கும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பெரும் நெல் விளைச்சல் கிடைத்துள்ளது.

இது அரசாங்கத்தின் கைங்கரியமல்ல. கடந்த ஆண்டு இறைவனின் ஆசீர்வாதத்தினால் இயற்கையின் ஆசீர்வாதத்தினால் நல்ல மழை கிடைத்தது. குளங்கள் நீரோடைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.

இதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைத்தது. விவசாயிகளின் கண்ணீர், பெரு மூச்சு, உழைப்பு என்பவற்றின் மூலம்தான் பெருமளவிலான விளைச்சல் கிடைத்தது. இந்த நாட்டிலிருந்த ஜனாதிபதிகளில் அதிகமாக மட்டக்களப்புக்கு வந்த ஜனாதிபதியாக நான் இருக்கின்றேன். ஒரு வருடத்தில் 3 தடவைகள் மட்டக்களப்புக்கு வந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் அமைச்சர் ஜயந்த கருணாதிலக்க கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுனர் அஸாத் சாலி, இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலிசாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், அரசாங்க அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன், பெரிய போரதீவு, வெல்லாவெளி தினகரன், ஆரையம்பதி தினகரன் நிருபர்கள்

 

Sat, 04/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை