மாத்தறை - பெலியத்தை புகையிரத சேவை இன்று ஆரம்பம்

மாத்தறை --, கதிர்காமம் வரையிலான புகையிரத பாதையின் நிறைவடைந்துள்ள பகுதியான மாத்தறை,பெலியத்தைக்கான ரயில் சேவை இன்று காலை 9.00 மணி ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து,சிவில் விமான சேவைகள்

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்வர்.

மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதன் முதலாவது கட்டம் மாத்தறை முதல் பெலியத்த வரையிலான 26 கி.மீ. ஆகவும், இரண்டாம் கட்டம் பெலியத்த முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான 48 கி.மீயும் மூன்றாம் கட்டம் ஹம்பாந்தோட்டை முதல் கதிர்காமம் வரையிலான 39 கி.மீ. ஆகவும் உள்ளது.

மாத்தறை முதல் பெலியத்தை வரையிலான முதல்கட்ட பாதை நிர்மாணப்பணிகளுக்கு 278 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான முதலீட்டை சீன எக்ஸிம் வங்கி வழங்கியுள்ளது.

இப் பாதையில் கெகணதுர,பம்பரந்த,வெவுரு கண்ணல மற்றும் பெலியத்தை ஆகிய பிரதேசங்களில் பிரதான புகையிரத நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு பிலதுவ மற்றும் வெஹெரஹேன ஆகிய பிரதேசங்களில் உப புகையிரத நிலையங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மிக நீளமான புகையிரத சுரங்கப் பாதையான நாகுட்டிகமவிலிருந்து கெகணதுர பாதையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 615 மீற்றர்களாகும். இதன் பிரகாரம் மாத்தறையிலிருந்து காலை 7.30, 10.40, பிற்பகல் 12.40, 01.47 ,மாலை 05.48, இரவு 07.20, 07.35, 09.38 போன்ற நேரங்களில் சேவைகள் நடைபெறவுள்ளன. இதேவேளை, பெலியத்தவில் இருந்து அதிகாலை 04.30, 05.20, 05.50க்கும் காலை 06.30, 09.05, 11.40க்கும் பிற்பகல் 01.30, 4.30க்கும் சேவைகள் நடைபெறும்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

 

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை