வவுணதீவு தாக்குதலுடன் தொடர்பு; காத்தான்குடியில் இருவர் கைது

தற்கொலைக் குண்டுதாரியான ஸஹ்ரானின் சாரதியான “கபூர் மாமா” என்றழைக்கும் மொஹம்மட் ஷரீப் ஆதம்லெப்பை வழங்கிய தகவலையடுத்து வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களின் படி 2018 நவம்பர் மாதம் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வெட்டிமற்றும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் ​கொன்ஸ்டபிலிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரு துப்பாக்கிகளையும் சி. ஐ. டியினர் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நிந்தவூர் மற்றும் வனாத்தவில்லு பிரதேசங்களில் மிகவும் சூட்சுமமாக மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி இரு துப்பாக்கிகளையும் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் மாவனெல்லையில் தஸ்லீம் என்பவரை இலக்குவைத்து மேற்படி சந்தேகநபர்களினாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு ஊடகமையத்தின் பணிப்பாளரும் இராணுவ ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து தலைமையில் பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் ;

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான ஸஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத குழுக்களால் கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் என்ற ஐந்து பாதுகாப்புபடைத் தரப்பினரால் நாடளாவியரீதியில் ஒன்றிணைந்த பாரிய தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதகவல் ஒன்றின் அடிப்படையில் தற்கொலை குண்டுத்தாரி ஸஹ்ரானின் சாரதியான மீன்பிடி கூட்டுத்தாபன வீதி, புதியகாத்தான்குடி என்றமுகவரியைச் சேர்ந்த“கபூர் மாமா” என்றழைக்கும் மொஹம்மட் ஷரீப் ஆதம் லெப்பை கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே சி. ஐ. டி யினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சி. ஐ. டியினர் மேற்படி சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக பல்வேறு கோணங்களில் மேற்கொண்ட விசாரணையின் போது 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி வவுணத்தீவு பிரதேசத்தில் வீதிச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபில்கள் வெட்டி மற்றும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அதனுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பிலும் இரு பொலிஸ் கான்ஸ்டபிலிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரு துப்பாக்கிகள் தொடர்பிலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவல்களின் பிரகாரம் சி. ஐ. டியினரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து நிந்தவூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றை நேற்று முன்தினம் சுற்றிவளைத்து சோதனைக் குட்படுத்தியதில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக மறைந்திருந்ததாக கூறப்படும் இந்தவீட்டில் பொலிஸாரிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரு துப்பாக்கிளில் ஒன்றையும் அதற்கு பயன்படுத்தப்படும் ஐந்துதுப்பாக் கிரவைகள் லெப்டொப் 3,கையடக்க தொலைபேசி,பல்வேறு விதமான உடைகள் மற்றும் பெருந்தொகை புத்தகங்களையும் மீட்டெடுத்துள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட புத்தகங்களிலிருந்து விசாரணைகளுக்கு தேவையான தகவல்கள் மேலும் கிடைக்கலாம் எனவிசாரணை அதிகாரிகள் கருதுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை,சந்தேகநபரிடம் மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் வவுணத்தீவு பொலிஸாரின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டமேலும் இரு சந்தேகநபர்களையும் சி. ஐ. டியினர் கைது செய்துள்ளனர்.

புதிய காத்தான்குடி, மீன்பிடி கூட்டுத்தாபன வீதியைச் சேர்ந்த 34 வயதுடையஅப்துல் மனாப் மொஹம்மட் பிர்தௌவ்ஸ் மற்றும் எம். ஜே. எம் வீதியைச் சேர்ந்த ஹம்ஸா மொஹிடீன் மொஹம்மட் இம்ரான் என்ற இரு சந்தேகநபர்களையே சி.ஐ.டியினர் இதன்போது கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் படிவனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள இடம் ஒன்றின் காட்டுப்பகுதியில் மேற்கொண்டதேடுதலின் போது பயங்கரவாதிகள் தங்களது மறைவிடமாக பயன்படுத்தியுள்ள இந்த இடத்தில் பிளாஸ்டிக் பரலில் மிகவும் சூட்சுமமாக மறைத்து காட்டுப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர். இதன் போதுவவுணத்தீவு சம்பவத்தின் போதுபொலிஸாரிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டாவது துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டுளளது. இதற்கு மேலதிகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி வெளிநாட்டு தயாரிப்பு மைக்ரோரக துப்பாக்கி கொம்பஸ் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தொகை, உள்நாட்டு தயாரிப்பு ஆறு துப்பாக்கிகள்,பல்வேறு வகையான 16 துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந் தொகையான உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை,மேற்படி மூன்று சந்தேகநபர்களிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணைகளின் போது மாவனல்லை பிரதேசத்தில் மொஹம்மட் ராஸிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்யமுயற்சித்த சம்பவம் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் வவுணதீவு பொலிஸாரிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட துப்பாக்கியே இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி மூன்று சந்தேகநபர்களிடமும் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸாதிக் ஷிஹான்

Mon, 04/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை