மீள்குடியேற்றத்திற்கு தனியார் காணிகள் கொள்வனவு

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்து இன்னமும் நலன்புரி முகாம்களில் உள்ளவர்களை மீளக்குடியமர்த்தத் தேவையான காணிகளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீளக்குடியமர்த்தல் மற்றும் புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.  

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிலவிய மோதல்கள் காரணமாக உள்ளூரில் இடம்பெயர்ந்த 577குடும்பங்கள் தொடர்ந்தும் 25நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றன. இவர்களில் 381குடும்பங்கள் காணிகளை இழந்த குடும்பங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.  

எனினும், யாழ்ப்பாண பிரதேசத்தில் அரச காணி போதுமளவு இல்லாததன் காரணமாக இவர்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கத்தினால் காணிகளை ஒதுக்கீடு செய்வது பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.இதனால் இந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான காணியை மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அமைய தனியார் உரிமையாளர்களிடம் கொள்வனவு செய்வதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(நமது நிருபர்)

Thu, 04/04/2019 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை