அமெரிக்க கடவுச்சீட்டிலே இன்னும் பயணம்

அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யவதற்காக விண்ணப்பித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளமை முற்றிலும் பொய்யான விடயம். குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான விண்ணப்பத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திடம் சமர்ப்பித்திருந்தால் அமெரிக்க கடவுச்சீட்டையையும் ஒப்படைக்க வேண்டுமென்பது அந்நாட்டுச் சட்டமாகும். ஆனால், கோட்டாபய ராஜபகஷ் இலங்கைக்கு வருவதும் செல்வதும் அமெரிக்க கடவுச்சீட்டிலே என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 தொடர் அத்துடன், தம்மை அமெரிக்க எதிர்ப்பாளர்களாகக் காட்டிக்கொள்பவர்கள்தான் 2007ஆம் ஆண்டு அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்த்தில் கைச்சாட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் “தினகரன்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப் படவில்லை. தமது அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச் செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அது முற்றிலும் பொய்யானது. அவர் குடியுரிமையை ரத்துசெய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால் அமெரிக்க கடவுச்சீட்டில் இலங்கைக்கு வரமுடியாது. அவர் அமெரிக்காவுக்குச் சென்றதும் அந்நாட்டு கடவுச் சீட்டில்தான். இங்குவந்ததும் அதே கடவுச் சீட்டிலேதான். ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டிருந்தால் கடவுச்சீட்டையும் வழங்க வேண்டும் என்பதுதான் அங்குள்ள குடியுரிமைச் சட்டம். குடியுரிமையை ரத்துசெய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எவர் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

அமெரிக்காவை வெறுமனே விமர்சனம் செய்யும் பஸில், கோட்டா போன்றோர் அந்நாட்டுக் குடியுரிமையை வைத்துக்கொண்டு போலியான நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்தகொள்ள வேண்டும். இவர்கள்தான் 2007ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிருந்தனர். அமெரிக்கக் குடியரிமையை நீக்கிக்கொள்ள அவர்களுக்கு உண்மையில் விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை.

இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போனால் கல்வியலாளர்கள், கலைஞர்கள், சிவில் அமைப்புகள் உட்பட நாட்டின் பலதரப்பினரையும் இணைத்து பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஜே.வி.பி. களமிறக்கும். அவ்வாறான சூழலில் ஜனாதிபதித் தேர்தலானது முத்தரப்புப் போட்டியாக மாறும் என்பதுடன் எந்தவொரு தரப்பாலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 04/18/2019 - 06:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை