மக்கள் நலன்களுக்காக அதிகாரங்களை பயன்படுத்துவதே பிரதிநிதிகளின் பொறுப்பு

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல்,மோசடிகள் பிரதான தடைகளாக உள்ளது போல் மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றாமையும் பெரும் தடையாக உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேற்று தெரிவித்தார்.

பொலன்னறுவை மாநகர சபையின் புதிய கட்டிடத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி , தேர்தல் மேடைகளில் எதைச் சொன்னாலும் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கோ அல்லது மாகாண சபை மற்றும் பிரதேச சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கோ மக்களின் பிரதிநிதிகள் சிலர் அக்கறை செலுத்தாது உள்ளனர். இதனால் நாட்டு மக்களின் பிரச்சினைகள் பற்றி இவர்களுக்கு சரியான புரிந்துணர்வு இல்லாதுள்ளது.

தேர்தல் காலப் பகைகளை மறந்து மக்களின் சேவைக்காக தங்களை அர்ப்பணிப்பதில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு அப்பால் நகர பிதாக்கள்,பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோருக்கும் நிறைவேற்று அதிகாரமுள்ளது. இந்த அதிகாரங்களை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டியது சகல மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும்.

இதனிடையே பொலன்னறுவை பொலிஸ் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் கட்டிடத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இங்கு உரையாற்றிய அவர், சிறுவர்கள், பெண்கள் மீது இடம்பெறும் வன்முறைகளை ஒழிப்பதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மாத்திரமன்றி எமது கலாசார பழக்க வழக்கங்களின் செயற்பாடுகளும் அவசியமாகும். சட்டத்தை விட கலாசார பழக்க வழக்கங்கள் பலம் மிக்கவை.

நேற்றைய நிகழ்வில் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 501 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதுறுவெல புதிய பஸ் தரிப்பு நிலையத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

ஊடகவியலாளர்களுக்கு இலவச பிரயாண சீட்டுக்களும் இதன்போது வழங்கப்பட்டன.

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை