ஒன்பது ஆசிய சாதனைகள் முறியடிப்பு

  • 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்
  • இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து பின்னடைவு

கட்டார் கலிபா சர்வசே விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மூன்றாவது நாளாகவும் நேற்று (23) நடைபெற்றது. இம்முறை போட்டித் தொடரின் இரண்டு நாட்கள் நிறைவில் ஒன்பது ஆசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் போட்டிகளின் முதல் நாளன்று ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.71 மீற்றர் உயரம் தாவி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்னஸ்ட் ஜோன் ஒபேய்னாவும், ஆண்களுக்கான தட்டெறிதலில் ஈரானைச் சேர்ந்த எஹ்சான் ஹதாதியும் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இதில் 34 வயதான ஹதாதி 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் கட்டாரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் சம்பா (47.51 மீற்றர்), ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சீனா தாய்ப்பேயைச் சேர்ந்த சாஓ சேங் (86.72 மீற்றர்), பெண்களுக்கான 100 மீற்றரில் கஸகஸ்தானைச் சேர்ந்த ஒல்கா சப்ரனோவா (11.17 செக்.), பெண்களுக்கான சம்மட்டி எறிதலில் சீனாவின் சேங் வேங் (75.66 மீற்றர்), பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சீனாவின் ஹுய்ஹுய் (65.83 மீற்றர்) ஆகியோருடன் பெண்களுக்கான 4+100 அஞ்சலோட்டத்தில் பங்குகொண்டு தங்கப் பதக்கம் வென்ற (38.72 செக்.) தாய்லாந்து அணியும் புதிய ஆசிய சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியின் இரண்டாவது நாளான நேற்றுமுன்தினம் (22) இரவு நடைபெற்ற, இலங்கை அணியின் பதக்கம் வெல்லும் வாய்ப்பாக இருந்த பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற நிமாலி லியனாராச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகியோர் பதக்க வாய்ப்பை தவறவிட்டனர்.

அத்துடன் ஆண்களுக்கான 100 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ எஷான், ஐந்தாவது இடத்தையும், ஆண்களுக்கான 800 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட ருசிரு சத்துரங்க நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

மற்றொரு போட்டியான ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் போட்டியில் கலந்து கொண்ட கிரேஷன் தனன்ஞய 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொள்ள, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட சுமேத ரணசிங்க, 8ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர்.

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக பதக்கங்களை வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெரும்பாலான வீரர்கள் தமது தனிப்பட்ட அடைவுமட்டத்தினைக் கூட எட்ட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது

23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீராங்கனைகளான நிமாலி லியனாரச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.

ஆசியாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்குபற்றியிருந்த இப்போட்டியின் 3ஆவது சுவட்டில் நிமாலியும், 4ஆவது சுவட்டில் கயன்திகாவும் போட்டியிட்டனர்.

மிகவும் விறுவிறுப்புக்கு மத்தியில் ஆரம்பமாகிய இப்போட்டியில் சீனா, கஸகஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் முதல் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முன்னிலை பெற்றிருந்தனர்.

எனினும், அவர்களை முந்துவதற்கு கயன்திகா மற்றும் நிமாலி ஆகிய இருவரும் கடும் முயற்சியை மேற்கொண்டிருந்தாலும், அவர்களது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது. இதனையடுத்து, இறுதி 600 மீற்றர் ஓட்டத்தில் தமது வேகமான ஓட்டத்தை முன்னெடுக்க இலங்கை வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போக, போட்டியில் பின்னடைவை சந்தித்து தோல்வியைத் தழுவினர்.

போட்டியை 2 நிமிடங்கள் 5.74 செக்கன்களில் நிறைவு செய்த கயன்திகா அபேரத்ன நான்காவது இடத்தையும், 2 நிமிடங்கள் 08.69 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த நிமாலி லியனாராச்சி ஏழாவது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.அவர் மைதானத்தில் வாந்தி எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 2017ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற நிமாலி மற்றும் கயன்திகாவுக்கு இம்முறை போட்டிகளில் பெரும் ஏமாற்றம் அளித்தது.

இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 02.70 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார். இது அவரது அதிசிறந்த ஓட்டப் பெறுமதியாகும். தங்கப் பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

சீனாவின் வேங் சுன்யூ (2 நிமி. 02.96 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், கஸகஸ்தானின் முகசேவா மர்கரிட்டா (2 நிமி. 03.83 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இதில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற சீனா, கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான ஹிமாஷ ஏஷான், நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கினார்.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றிய ஹிமாஷ, ஐந்தாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார். குறித்த போட்டியை நிறைவு செய்ய 10.51 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

முதல் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட ஹிமாஷ, போட்டியை 10.42 செக்கன்களில் நிறைவு செய்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரினை இலக்காகக் கொண்டு கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் 10.22 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய இலங்கை சாதனை படைத்த ஹிமாஷவுக்கு இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் எதிர்பார்த்தளவு திறமையினை வெளிப்படுத்த முடியாமல் போனது.

12 வீரர்கள் பங்குபற்றிய ஆண்களுக்கான முப்பாய்ச்சல் இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கிய கிரேஷன் தனன்ஞய, 16.16 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கையில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 16.79 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தேசிய சாதனை படைத்த கிரேஷனால், நேற்றுமுன்தினம் நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 15.87 மீற்றர் தூரத்தை மாத்திரமே பாயக்கூடியதாக இருந்தது.

இப்போட்டியில் கஸகஸ்தானின் குல்பானோ ருல்சான், 16.93 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், சீனாவின் சூ யாமிங் (16.87 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு சீன நாட்டு வீரரான சூ ஸியலொங் (16.81 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான சுமேத ரணசிங்க, 73.50 மீற்றர் தூரத்தை எறிந்து எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியில், முறையே 72.29, 72.48, 71.83, 71.68, 73.02 மற்றும் 73.50 மீற்றர் தூரங்களைப் பதிவு செய்த சுமேத ரணசிங்கவுக்கு எதிர்பார்த்தளவு திறமையினை வெளிப்படுத்த முடியாமல் போனது.

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு கொழும்பில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 79.65 மீற்றர் தூரம் எறிந்து ஆசிய மெய்வல்லுனர் தொடருக்கான அடைவுமட்டத்தினைப் அவர் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் சீனா தாய்ப்பே வீரரான சென்ங் சோ, 86.72 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள, இந்தியாவின் சிவ்பால் சிங் (86.23 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பானின் அரைய் ரியோஹல் (81.93 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இன்று போட்டியின் இறுதி நாளாகும்.

போட்டித் தொடரின் மூன்றாவது நாளான நேற்று (23) ஹிமாஷ ஏஷான் (200 மீற்றர் முதல் சுற்று), பிரசாத் விமலசிறி மற்றும் தனுஷ்க பிரியரத்ன (நீளம் பாய்தல் தகுதிச் சுற்று), ஹேமன்த குமார (1500 மீற்றர் முதல் சுற்று), நிலானி ரத்னாயக்க (3000 மீற்றர் தடை தாண்டல்), விதூஷா லக்ஷானி (முப்பாய்ச்சல் இறுதிப் போட்டி) ஆகியோர் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

கட்டாரிலிருந்து பரீத் ஏ .ரகுமான்

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை