பாராளுமன்றத்தை போன்று கிரிக்கெட்டும் பிரச்சினைக்குரியதாக மாறக் கூடாது

பாராளுமன்றத்தினை போன்று கிரிக்கெட் விளையாட்டும் பிரச்சினைகள் நிறைந்த இடமாக இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு சபாநாயகர் இருக்கின்ற போதும் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவ்வாறான நபர் ஒருவர் கிரிக்கெட்டினுள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மொரட்டுவை, டி சொய்சா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டித்தொடரின் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் ​மேலும் குறிப்பிட்டதாவது, எமது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டினை நாம் முன்னோக்கிச் கொண்டு செல்ல வேண்டும். ஒரு காலத்தில் எமது கிரிக்கெட் உலகத்தின் விசேடமான இடமொன்றினை பிடித்திருந்தது. அதனால் நாம் மீண்டும் அந்த நிலையினை அடையவேண்டும். கிரிக்கெட் விளையாட்டானது பாராளுமன்றத்தினை போன்று பிரச்சினைகள் நிறைந்த இடமாக இருக்கக் கூடாது. பாராளுமன்றத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், கிரிக்கெட் விளையாட்டில் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படக் கூடாது.

இன்று கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவ்வாறான நபர் ஒருவர் கிரிக்கெட்டினுள் இல்லை. அதனால் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்வதற்காக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிரிக்கெட் உட்பட நாட்டின் ஏனைய விளையாட்டுக்களையும் விருத்தி செய்வதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அவசியமான விளையாட்டு மைதானங்கள், நிதிவசதிகள் என்பவற்றை நாம் பெற்றுக் கொடுக்கின்றோம்.

அதேபோன்று கட்டுப்பாட்டு சபைகளும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. கட்டுப்பாட்டு சபைகள் முறையான பெறுபேறுகளை வெளிக்காட்டுவார்கள் எனின், அதற்கு ஏற்றாற் போல் இன்னும் அதிகமாக நிதி ஒதுக்க முடியும். கட்டுப்பாட்டு சபைகளில் பிரச்சினைகள் இருக்கும் எனின் அந்த சபைகளுக்கு நிதி வசதிகளை செய்து கொடுப்பதற்கு பதிலாக கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு அதனை பயன்படுத்துவது மேலாகும். விளையாட்டுக்களுக்கு நிதியினை செலவழிப்பது நாட்டுக்கு புகழினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே தவிர அந்த நிதியினை களியாட்ட நிலையங்களில் பயன்படுத்துவதற்கு அல்ல என்றார்.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை